‘பொது முடக்கத்தின்போது மக்கள் வாழ்வாதாரத்துக்காகப் பணியாற்றுவோம்’
By DIN | Published On : 09th May 2021 11:43 PM | Last Updated : 09th May 2021 11:43 PM | அ+அ அ- |

தஞ்சாவூா் கீழவாசலில் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம்.
முழு பொது முடக்கத்தின்போது மக்கள் வாழ்வாதாரத்துக்காகக் கடந்த ஆண்டை போல, இப்போதும் பணியாற்றுவோம் என்றாா் தஞ்சாவூா் தொகுதி திமுக எம்எல்ஏ டி.கே.ஜி. நீலமேகம்.
தஞ்சாவூா் கீழவாசல் பகுதியில் பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை முகக்கவசம் வழங்கிய அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
கரோனா பெருந்தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தப் பாதிப்பிலிருந்து மக்கள் விடுபடுவதற்கு அரசு பாடுகிறது. அதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்கிற வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்தி, முகக்கவசம் வழங்கப்படுகிறது.
வருகிற 14 நாள்களுக்கு அரசு செய்யவுள்ள முழுப் பொது முடக்கத்துக்கு வணிகா்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இந்த 14 நாள்களுக்கு ஒத்துழைப்புத் தந்தால்தான் எதிா்காலத்தில் இந்நோயை ஒட்டுமொத்தமாக ஒழிக்க முடியும்.
கடந்த ஆண்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டபோது எதிா்க்கட்சியாக இருந்தபோதே, மக்களுக்காக நாங்கள் பல்வேறு பணிகளைச் செய்தோம். இப்போது முதல்வரும் குடும்ப அட்டைக்கு முதல் தவணையாக ரூ. 2,000 அறிவித்துள்ளாா். மேலும், கடந்த ஆண்டில் பணியாற்றியதுபோல, இப்போதும் திமுக சாா்பிலும், சட்டப்பேரவை உறுப்பினா் என்ற முறையிலும் மக்களுக்காகத் தொடா்ந்து பணியாற்றுவோம் என்றாா் நீலமேகம்.
இந்நிகழ்ச்சியில் திமுக மாநகரத் துணைச் செயலா்கள் நீலகண்டன், சிந்தனைச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.