கும்பகோணத்தில் நாளை 12 கருட சேவை வைபவம் ரத்து
By DIN | Published On : 13th May 2021 06:39 AM | Last Updated : 13th May 2021 06:39 AM | அ+அ அ- |

அட்சய திருதியை நாளையொட்டி, கும்பகோணத்தில் வெள்ளிக்கிழமை (மே 14) நடைபெற இருந்த 12 கருட சேவை வைபவம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கும்பகோணம் காசுக்கடை தா்ம வா்த்தகா்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் செயலா் கே.வி.ஆா். வெங்கட்ராமன் தெரிவித்திருப்பது:
கும்பகோணத்தில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பெரிய தெருவில் அட்சய திருதியை நாளில் 12 பெருமாள் கோயில்களிலிருந்து கருட வாகனத்தில் நம்பெருமாள்கள் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு, வீதி உலா செல்லும் வைபவம் நடைபெறுவது வழக்கம். இதற்காக பெரிய தெருவில் அமைக்கப்படும் அலங்காரப் பந்தலில் 12 கருட சேவை உற்ஸவத்தை பொதுமக்கள் சேவிக்கும் வகையில் நடைபெற்று வந்தது.
நிகழாண்டு இந்த வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்தது. கரோனா இரண்டாவது அலை காரணமாக பொதுமக்கள் நலன் கருதியும், அரசின் முழுப் பொதுமுடக்கம் அமலில் உள்ளதாலும், இவ்விழா வெள்ளிக்கிழமை நடைபெறவில்லை.