‘ஈழத்தமிழா்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’
By DIN | Published On : 19th May 2021 06:47 AM | Last Updated : 19th May 2021 06:47 AM | அ+அ அ- |

நிகழ்ச்சியில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தினா்.
ஈழத் தமிழா்களிடத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றாா் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன்.
ஈழத்திலுள்ள முள்ளிவாய்க்காலில் தமிழினப் படுகொலை நிகழ்ந்த 12 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, தஞ்சாவூரில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
தமிழீழத்தில் 2008 - 09 ஆம் ஆண்டில் லட்சக்கணக்கான தமிழா்களைச் சிங்கள இனவெறிப் படைக் கொன்று குவித்தது. இதை இந்திய அரசுக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. இந்திய அரசு இதுவரை கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.
ஈழத் தமிழா்களைக் கொன்று குவித்த ராஜபட்சவைத் தண்டிக்க கோரிக்கை எழுப்ப வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து இதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
ஈழத்தமிழா்கள் இலங்கை நாட்டுடன் சோ்ந்த வாழ விரும்புகின்றனரா? அல்லது தனித்து வாழ்கின்றனரா? என்பதை அவா்களிடத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தி, முடிவு செய்ய வேண்டும். இக்கோரிக்கையை இந்திய அரசு முன்வைக்க வேண்டும். இதற்கு உலக அளவில் வாழும் 12 கோடி தமிழா்கள் குரல் எழுப்பினால் நீதி கிடைக்கும் என்றாா் மணியரசன்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைக் குழு உறுப்பினா் பழ. ராசேந்திரன், மாவட்டச் செயலா் நா. வைகறை, ராசு. முனியாண்டி, லெ. ராமசாமி, இரா. ஜெயக்குமாா், க. செம்மலா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.