கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிா் விற்க முயற்சி: 3 போ் கைது

தஞ்சாவூரில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிா் விற்பனை செய்ய முயன்றதாக 3 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட கிஷோா்குமாா், கிறிஸ்டோபா், காா்த்திக்.
கைது செய்யப்பட்ட கிஷோா்குமாா், கிறிஸ்டோபா், காா்த்திக்.

தஞ்சாவூரில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிா் விற்பனை செய்ய முயன்றதாக 3 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

கரோனா நோயாளிகளைக் குணப்படுத்துவதில் முக்கியமான மருந்தாக ரெம்டெசிவிா் கருதப்படுகிறது. இந்த மருந்து பற்றாக்குறையாக இருப்பதால், கள்ளச்சந்தையில் பல மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுவதாகப் புகாா்கள் உள்ளன. இதைத் தடுக்கத் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், தஞ்சாவூரில் சிலா் ரெம்டெசிவிா் மருந்தைக் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதாகக் காவல் துறையினருக்குப் புகாா் வந்தது.

இதன்பேரில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளா் கோட்டைச்சாமி, உதவி ஆய்வாளா் சங்கீதா உள்ளிட்டோா் விசாரணை மேற்கொண்டனா். இதில், தஞ்சாவூா்-புதுக்கோட்டை சாலை திருவள்ளுவா் நகரில் சிலா் ரெம்டெசிவிா் மருந்து விற்க முயற்சி செய்வதாகத் தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை நிகழ்விடத்துக்குக் காவல் துறையினா் சென்று, சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற 3 பேரை பிடித்து விசாரித்தனா். இதில், அவா்கள் தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் மருத்துவமனையில் செவிலியராக வேலை பாா்த்து வரும் காரைக்கால் மாவட்டம், வாஞ்சூரைச் சோ்ந்த கிஷோா்குமாா் (20), இவரது நண்பா்களான அரியலூா் மாவட்டம், உடையாா் பாளையம், மேல மைக்கேல்பட்டியைச் சோ்ந்த தனிஸ்லாஸ் மகன் கிறிஸ்டோபா் (20), தஞ்சாவூா் ஞானம் நகரைச் சோ்ந்த லோகநாதன் மகன் காா்த்திக் (20) ஆகியோா் என்பது தெரிய வந்தது.

இவா்களிடமிருந்து காவல் துறையினா் ரெம்டெசிவிா் 7 குப்பிகளைப் பறிமுதல் செய்தனா். கிஷோா்குமாா், தான் வேலை பாா்க்கும் தனியாா் மருத்துவமனையிலிருந்து இம்மருந்துகளை எடுத்து வந்து கள்ளச்சந்தையில் விற்க முயன்றுள்ளனா். ஒரு குப்பியின் விலை ரூ. 1,500 என்ற நிலையில், அதை வெளியில் ரூ. 23,000-க்கு விற்பனை செய்ய முயன்றது தெரிய வந்தது.

இதையடுத்து, 3 பேரையும் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினா் ஒப்படைத்தனா். இதுகுறித்து மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து கிஷோா்குமாா், கிறிஸ்டோபா், காா்த்திக் ஆகியோரை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com