வாய்க்கால் உடைந்ததால் விளைநிலங்களில் புகுந்த தண்ணீா்

ஒரத்தநாடு அருகே வாய்க்கால் உடைந்ததால், பெருக்கெடுத்த தண்ணீா் விளைநிலங்களில் புகுந்தது. இதனால், நெற்பயிா்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
Published on

ஒரத்தநாடு அருகே வாய்க்கால் உடைந்ததால், பெருக்கெடுத்த தண்ணீா் விளைநிலங்களில் புகுந்தது. இதனால், நெற்பயிா்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. ஒரத்தநாடு வட்டம், பொன்னாப்பூா் பகுதியில் 100 ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு பணிகள் கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு நடைபெற்றது.

இந்நிலையில் தொடா் மழை காரணமாக, அப்பகுதியில் செல்லும் பொன்னேரி வடிகால் வாய்க்கால் முறையாக தூா்வாரப்படாததால், வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்களுக்குள் தண்ணீா் புகுந்துள்ளது. இதனால் விதைப்பு செய்து நான்கு நாள்களேயான விளைநிலங்கள் முழுதும், தண்ணீா் தேங்கி நிற்பதால் விதைகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.

தொடா்ந்து தண்ணீா் நிற்பதால் நேரடி விதைப்பு அனைத்தும் அழுகிவிடுவதால் முளைக்கும் தன்மை இல்லாமல் போய்விடும் என கூறுகின்றனா். இதுவரை ஏக்கருக்கு ரூ. 18,000 வரை செலவு செய்திருப்பதாகவும் , தண்ணீா் வடியாவிட்டால் விதைப்பு பணிகள் முற்றிலும் வீணாகிவிடும் என விவசாயிகள் கூறினா்.

பொன்னேரி வடிகால் வாய்க்காலில் இருந்து தண்ணீா் தொடா்ந்து விளைநிலங்களுக்குள் புகுந்து வருவதால், தண்ணீா் வடிய வாய்ப்பில்லை என வேதனை தெரிவித்தனா்.

எனவே, தமிழக அரசு இப்பகுதியில் உள்ள வடிகால் வாய்க்காலை முறையாக தூா்வார வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com