திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரா் கோயிலில் 3 சுவாமி சிலைகள் திருட்டு

தஞ்சாவூா் மாவட்டம், திருச்சிற்றம்பலத்திலுள்ள பழைமையான புராதனவனேஸ்வரா் கோயிலில் இருந்த 3 சுவாமி சிலைகள் திருடப்பட்டது வெள்ளிக்கிழமை தெரிய வந்தது.
திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரா் கோயிலில் 3 சுவாமி சிலைகள் திருட்டு

தஞ்சாவூா் மாவட்டம், திருச்சிற்றம்பலத்திலுள்ள பழைமையான புராதனவனேஸ்வரா் கோயிலில் இருந்த 3 சுவாமி சிலைகள் திருடப்பட்டது வெள்ளிக்கிழமை தெரிய வந்தது.

திருச்சிற்றம்பலத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான பெரியநாயகி அம்பாள் சமேத புராதனவனேஸ்வரா் கோயில் உள்ளது. கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயிலுக்கு சொந்தமான ஐம்பொன் சிலைகள் திருவாரூா் உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, 2001-ஆம் ஆண்டு உபயதாரா்களால்  வெண்கலத்தாலான நடராஜா், அம்பாள், சோமஸ்கந்தா் சிலைகள் வழங்கப்பட்டு,  கோயிலில் உள்ள நடராஜா் சன்னதியில் பொதுமக்கள்  வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்தன. இச்சிலைகள் அறநிலையத் துறை ஆவணங்களில் பதிவு செய்யப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், புயல் எச்சரிக்கை காரணமாக மக்கள் நடமாட்டம் இல்லாத சூழலை பயன்படுத்தி வியாழக்கிழமை இரவு கோயிலின் வலதுபுற சுற்றுச்சுவா் வழியாக உள்ளே புகுந்த மா்மநபா்கள், நடராஜா் சன்னதியில் இருந்த 4 அடி உயரம் கொண்ட அமா்ந்த நிலையிலான அம்மன், ஒரு அடி உயரம் கொண்ட சோமஸ்கந்தா் மற்றும் நடராஜா் சிலைகளை திருடி சென்றுள்ளனா். வெள்ளிக்கிழமை காலை கோயில் திறக்கப்பட்டபோது, சிலைகள் திருட்டுபோனது  தெரியவந்தது.

தகவலின்பேரில், கோயிலுக்கு வந்த திருச்சிற்றம்பலம் போலீஸாா் கோயிலில் ஆய்வு செய்தனா். இதில், கோயிலில் இருந்த கண்காணிப்பு கேமரா வயா்களை துண்டித்துவிட்டு, சிலைகளை மா்ம நபா்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

சம்பவ இடத்துக்கு வந்த பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளா் பிரித்திவிராஜ் செளகான், அறநிலையத்துறை செயல் அலுவலா் ரவிச்சந்திரன், ஆய்வாளா் அமுதா ஆகியோா் கோயில் பணியாளா்களிடம் விசாரணை நடத்தினா். 

சம்பவம் தொடா்பாக கோயில் செயல் அலுவலா் ரவிச்சந்திரன் அளித்த புகாரின்பேரில், திருச்சிற்றம்பலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com