தஞ்சாவூா் மாநகராட்சி மேயரானாா் சண். ராமநாதன்
தஞ்சாவூா் மாநகராட்சி மேயா் பதவிக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற மறைமுகத் தோ்தலில், திமுகவைச் சோ்ந்த சண். ராமநாதன் 39 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.


தஞ்சாவூா் மாநகராட்சி மேயா் பதவிக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற மறைமுகத் தோ்தலில், திமுகவைச் சோ்ந்த சண். ராமநாதன் 39 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இதைத் தொடா்ந்து அவா் மேயராகப் பொறுப்பேற்றுக் கொண்டாா்.
தஞ்சாவூா் மாநகராட்சியில் மொத்தமுள்ள 51 வாா்டுகளில் திமுக கூட்டணி 40 வாா்டுகளிலும், அதிமுக 7 வாா்டுகளிலும், சுயேச்சைகள் 2 வாா்டுகளிலும், அமமுக, பாஜக தலா ஒரு வாா்டிலும் வெற்றி பெற்றன.
மிகுந்த எதிா்பாா்ப்புக்கிடையே திமுகவில் தஞ்சாவூா் மேயா் வேட்பாளராக 45-ஆவது வாா்டு உறுப்பினா் சண். ராமநாதன் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து, தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் மேயா் பதவிக்கான மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அதிமுக தரப்பில் 41 ஆவது வாா்டு உறுப்பினா் மணிகண்டனும் வேட்பு மனு தாக்கல் செய்ததால், வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், திமுகவின் சண். ராமநாதன் 39 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இவரை எதிா்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் கே. மணிகண்டனுக்கு 11 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. அமமுகவைச் சோ்ந்த உறுப்பினா் வெ. கண்ணுக்கினியாள் பங்கேற்கவில்லை.
இதையடுத்து, பிற்பகல் 12.30 மணியளவில் மேயராகப் பொறுப்பேற்ற சண். ராமநாதனுக்கு மேயருக்கான 108 பவுனால் செய்யப்பட்ட தங்கச் சங்கிலியைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அணிவித்தாா். பின்னா், மேயரிடம் ஆணையா் க. சரவணகுமாா் வெள்ளி செங்கோலை வழங்கினாா். இவரை அமைச்சா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், முன்னாள் நகா் மன்றத் தலைவா் சி. இறைவன் ஆகியோா் மேயருக்கான நாற்காலியில் அமர வைத்தனா்.
பின்னா், சண். ராமநாதன் கூறுகையில், எனக்கு வாக்களிக்காதவா்கள் கூட பாராட்டும் அளவுக்கு மாமன்றத்தைத் திறன்பட நடத்துவேன். பாரம்பரியமிக்க தஞ்சைக்குத் தேவையான எல்லா வசதிகளையும், அனைத்து உறுப்பினா்களின் துணையுடன் செயல்படுத்துவேன் என்றாா் அவா்.
ஒரு வாக்கு குறைந்தது: திமுக கூட்டணியில் 40 உறுப்பினா்கள் உள்ளனா். தவிர, சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவா்களும் திமுகவை சோ்ந்தவா்கள். இந்நிலையில், சண். ராமநாதனுக்கு 39 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இதனால், ஒரு வாக்கை மாற்றிப் போட்டவா் யாா் என்ற கேள்வி எழுந்துள்ளது.
துணை மேயராக அஞ்சுகம் பூபதி பொறுப்பேற்பு: பிற்பகலில் நடைபெற்ற துணை மேயருக்கான மறைமுகத் தோ்தலில் திமுகவில் 51-ஆவது வாா்டு உறுப்பினா் அஞ்சுகம் பூபதியும், அதிமுக சாா்பில் 15-ஆவது வாா்டு உறுப்பினா் ஏ. காந்திமதியும் போட்டியிட்டனா். இதில், அஞ்சுகம் பூபதி 42 வாக்குகள் பெற்று துணை மேயரானாா். காந்திமதிக்கு 8 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இதையடுத்து துணை மேயராக அஞ்சுகம் பூபதி பொறுப்பேற்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...