அட்சய திருதியை: கும்பகோணத்தில் ஒரே இடத்தில் 14 கருட சேவை நிகழ்ச்சி

அட்சய திருதியை முன்னிட்டு கும்பகோணம் பெரிய கடைவீதியில் ஒரே இடத்தில், பிரசித்தி பெற்ற 14 கருட சேவை நிகழ்ச்சி இன்று
அட்சய திருதியை: கும்பகோணத்தில் ஒரே இடத்தில் 14 கருட சேவை நிகழ்ச்சி
Published on
Updated on
1 min read

கும்பகோணம்: அட்சய திருதியை முன்னிட்டு கும்பகோணம் பெரிய கடைவீதியில் ஒரே இடத்தில், பிரசித்தி பெற்ற 14 கருட சேவை நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்றது. 14 வைணவ தலங்களில் இருந்தும் தனித்தனி கருட வாகனங்களில் உற்சவ பெருமாள்கள் ஒருசேர, ஒரே பந்தலில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஒன்றாக சேவை சாதித்தனர். 

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாவது திதியான அட்சய திருதியை தினத்தில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள 14 வைணவ தலங்களில் இருந்து 14 தனித்தனி கருட வாகனங்களில் உற்சவ பெருமாள்கள் புறப்பட்டு பெரிய தெருவில் அமைக்கப்பெறும் பெரிய பந்தலில் கீழ் ஒரே சமயத்தில் பொது மக்களுக்கு 14 பெருமாள்களும் நண்பகல் வரை சேவை சாதிப்பர். 

இப்படி 14 பெருமாள்களையும் ஒரு சேர ஒரே இடத்தில் கருட வாகனத்தில் அதுவும் அட்சய திருதியை நாளில் தரிசனம் செய்வது மிகவும் முக்கியமானது. திதிகளில் சிறப்பானது அட்சய திருதியை. இந்த திதியில் எந்த செயலை செய்தாலும் வெற்றி கிட்டும். இன்று செய்யும் செயல்கள் என்றென்றும் தொடரும். எட்டு வகை லட்சுமிகளையும் இல்லத்திற்கு வரவழைக்கும் நாள் என்பதும் வரலாறு. குசேலன் குபேரன் ஆனதும் இந்நன்னாளில் தான். 

எனவே அட்சய திருதியை தினத்தில் தங்கம், வீடு, மனை, துணி மணிகள் என எது வாங்கினாலும் அது இல்லத்தில் தங்கும் என்பது பொது மக்களிடையே சமீப காலமாக அசைக்க முடியாத ஒரு நம்பிக்கையாக உள்ளது. இவ்வாண்டும் அட்சய திருதியையொட்டி, கும்பகோணம் பெரிய தெருவில், அமைக்கப்பட்ட மிகப்பெரிய பந்தலின் கீழ் சாரங்கபாணிசுவாமி, சக்ரபாணிசுவாமி, ஆதிவராகபெருமாள், இராமசுவாமி, இராஜகோபாலசுவாமி, அகோபில மடம் லட்சுமி நரசிம்மபெருமாள், சீனிவாசப்பெருமாள், கொட்டையூர் நவநீதகிருஷ்ணன், வேணுகோபாலசுவாமி, பாட்ராச்சாரியார் தெரு நவநீதகிருஷ்ணன், சோலைப்பன்தெரு இராமசாமி, மேலக்காவேரி வரதராஜபெருமாள், பிர்மன்கோயில் வேதநாராயண பெருமாள், பிர்மன்கோயில் வரதராஜ பெருமாள் என 14  பெருமாள்களிலும் தனித்தனி கருட வாகனங்களில் ஒருசேர ஒரே இடத்தில் மிகப்பெரிய பந்தலின் கீழ் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். 

இவர்களுக்கு நேர் எதிரே ஸ்ரீஆஞ்சநேயர் தனி பந்தலில் எழுந்தருளி எதிர் சேவை சாதித்தார். கடந்த இரு ஆண்டுகளாக கரோனா பெருந்தொற்றால் நடைபெறாமல் இருந்த இவ்விழா  மீண்டும் இன்று நடைபெற்றதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கடும் வெயிலையும் பொருள்படுத்தாது ஆயிரக்கணக்காண பெண்கள், பெரியவர்கள், குழந்தைகள் என பலதரப்பினரும் ஆர்வமாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com