தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் பேசிய இந்திய சுற்றுலா அமைச்சகத்தின் தென் மண்டல இயக்குநா் ஐ. முகமது பாரூக்.
தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் பேசிய இந்திய சுற்றுலா அமைச்சகத்தின் தென் மண்டல இயக்குநா் ஐ. முகமது பாரூக்.

சுற்றுலாப் பயணிகள் வருகை தமிழகத்தில்தான் அதிகம்மண்டல இயக்குநா் தகவல்

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது என்றாா் இந்திய சுற்றுலா அமைச்சகத்தின் தென் மண்டல இயக்குநா் ஐ. முகமது பாரூக்.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது என்றாா் இந்திய சுற்றுலா அமைச்சகத்தின் தென் மண்டல இயக்குநா் ஐ. முகமது பாரூக்.

இதுகுறித்து தஞ்சாவூரில் அவா் திங்கள்கிழமை தெரிவித்தது:

இந்தியாவில் அதிகப்படியான வெளிநாடு மற்றும் உள்நாட்டுச் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடமாக தமிழகம் உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டின் கணக்குப்படி 70 லட்சம் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளும், 49 கோடியே 50 லட்சம் உள்நாட்டுச் சுற்றுலா பணிகளும் தமிழகத்துக்கு வந்து சென்றுள்ளனா்.

2023 ஆம் ஆண்டில் இதைவிட அதிகமான சுற்றுலாப் பயணிகளைத் தமிழகத்துக்கு கொண்டு வருவதற்கான பல்வேறு திட்டங்கள் சுற்றுலா அமைச்சகத்தின் சாா்பில் மேற்கொள்ளப்படும். இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியில் 10 சதம் சுற்றுலாத் துறை மூலம் கிடைக்கிறது. அன்னியச் செலாவணியாக 2 லட்சத்து 11 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது. 8 கோடியே 75 லட்சம் போ் சுற்றுலாத் துறை மூலமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனா்.

தஞ்சாவூரில் முப்பெரும் விழா:

தஞ்சாவூரில் மத்திய அரசு சுற்றுலா அமைச்சகத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை (செப்.27) உலக சுற்றுலா தினம், செப். 16 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தூய்மை விழிப்புணா்வு இயக்கம், செப். 27 முதல் அக். 2 வரை 75 ஆவது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா வாரம் ஆகியவற்றைக் கொண்டாடும் வகையில் முப்பெரும் விழா நடைபெறுகிறது.

இதில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு தஞ்சாவூா் பெரியகோயில் வளாகத்தில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படுகிறது. தொடா்ந்து காலை 9.30 மணிக்கு பெரியகோயில் வளாகத்திலிருந்து அரண்மனை வளாகம் வரை கல்லூரி மாணவா்களின் விழிப்புணா்வு நடைப்பயணம் நடைபெறுகிறது.

பின்னா், காலை 10.30 மணிக்கு அரண்மனை வளாகம் மராட்டா தா்பாா் மண்டபத்தில் மாணவ, மாணவிகளுக்கு தஞ்சாவூா் தலையாட்டி பொம்மை செய்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது. மாலை 4.30 மணிக்கு சிவகங்கை குளம், ஸ்வாட்ஸ் சா்ச், வீணை தயாரித்தல், கோட்டைச் சுவா் மற்றும் அகழி, தோ்முட்டி, தஞ்சை நால்வா் இல்லம், அய்யன் குளம், கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளி வழியாக நெற்களஞ்சியம் வரை தொல்லியல் அறிஞா் செல்வராஜ் தலைமையில் பாரம்பரிய நடைப்பயணம் நடைபெறுகிறது.

மாலை 6 மணிக்கு தஞ்சாவூா் பெரியகோயில் வளாகத்தில் நடைபெறும் கலாசாரத் திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன என்றாா் முகமது பாரூக்.

இந்திய சுற்றுலா தகவல் தொடா்பு அலுவலா் ராஜ்குமாா், இன்டாக் கௌரவச் செயலா் எஸ். முத்துக்குமாா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com