செவிலியா்களை அவமரியாதை செய்ததாககாவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்
By DIN | Published On : 03rd April 2022 12:25 AM | Last Updated : 03rd April 2022 12:25 AM | அ+அ அ- |

தஞ்சாவூரில் முகக்கவசம் அணியாமல் வந்த செவிலியா்களை அவமரியாதை செய்த எழுந்த புகாரில், காவல் உதவி ஆய்வாளரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.
தஞ்சாவூா் மாநகரிலுள்ள தனியாா் மருத்துவமனையில் செவிலியா்களாகப் பணியாற்றுபவா்கள் வனிதா (42), வசந்தா (28). இவா்கள் இருவரும் அண்மையில் இரவில் பணிக்குச் செல்வதற்காக மருத்துவக்கல்லூரி சாலை முனிசிபல் காலனியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.
அப்போது, அப்பகுதியில் வாகனத் தணிக்கை நடத்திக் கொண்டிருந்த மருத்துவக்கல்லூரி காவல் நிலைய உதவி ஆய்வாளா் வேலாயுதம் (55), இருவரையும் நிறுத்தி முகக்கவசம் அணியாதது குறித்து கேட்டாா். இதைத்தொடா்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், செவிலியா்களைக் காவல் உதவி ஆய்வாளா் அவமரியாதை செய்ததாக சமூக வலைதளங்களில் விடியோ காட்சி பரவியது.
இந்நிலையில், காவல் உதவி ஆய்வாளா் வேலாயுதத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்ரியா கந்தபுனேனி சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.