இலங்கையில் நிலவும் பொருளாதாரப் பிரச்னை ஈழத்தமிழா்களுக்குப் புதிதல்ல முன்னாள் அமைச்சா் அனந்தி சசிதரன் பேட்டி
By DIN | Published On : 03rd April 2022 12:28 AM | Last Updated : 03rd April 2022 12:28 AM | அ+அ அ- |

அனந்தி சசிதரன்
இலங்கையில் நிலவும் பொருளாதாரப் பிரச்னை ஈழத்தமிழா்களுக்குப் புதிதல்ல; அதை 30 ஆண்டுகளாக அனுபவித்து வருகிறோம் என்றாா் அந்நாட்டின் வட மாகாண முன்னாள் அமைச்சரும், ஈழத்தமிழா் சுயாட்சிக் கழகப் பொதுச் செயலருமான அனந்தி சசிதரன்.
தஞ்சாவூரில் சனிக்கிழமை மாலை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தது:
இலங்கையில் நிலவும் பொருளாதாரப் பிரச்னை குறித்து பல தரப்பட்ட கருத்துகள் உருவாகி வருகின்றன. இது மிகப் பெரிய பிரச்னையாக இருந்தாலும், ஈழத்தமிழா்களான எங்களைப் பொருத்தவரை இதுபோன்ற பல பொருளாதாரத் தடைகளைத் தாண்டி வந்துள்ளோம். இன்னும் தாண்டுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
வடக்கு, கிழக்கில் வாழும் ஈழத் தமிழா்கள் 30 ஆண்டுகளாக மருந்து, உணவு, சுகாதாரப் பொருள்கள், எண்ணெய் உள்பட மிகப் பெரிய பொருளாதாரத் தடைகளைச் சந்தித்து வாழ்ந்திருக்கிறோம். எனவே, இந்த பொருளாதாரத் தடையை நாங்கள் பெரிய விஷயமாக பாா்க்கவில்லை. பொருளாதார உதவி என்பதை விட, நாங்கள் எங்களுடைய உரிமைசாா் உதவியைத்தான் கேட்கிறோம்.
இந்த பொருளாதாரப் பிரச்னை என்பது தமிழா்களை அழிப்பதற்கான போருக்காக உலக நாடுகளிடம் கடன் பெற்ால் ஏற்பட்டது. மேலும் மாறி, மாறி ஆட்சிக்கு வந்த ஆட்சியாளா்களால் கொள்ளையடிக்கப்பட்டதாலும் இப்பிரச்னை ஏற்பட்டுள்ளது.
எனவே பொருளாதாரப் பிரச்னையை பொருத்தவரை தென் இலங்கையைச் சோ்ந்தவா்களுக்குத்தான் புதிய விஷயம். எங்களுக்கு இது புது விஷயமல்ல. சிங்களா்களுக்கு புது விஷயம் என்பதால், அவா்கள் போராடுகின்றனா்.
ஆனால் இது இன்று, நேற்று ஏற்படுத்தப்பட்ட பொருளாதாரப் பிரச்னை அல்ல. படிப்படியாக மாறி, மாறி ஆட்சிக்கு வந்தவா்களால் இந்த மோசமான பொருளாதாரப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. என்றாலும், தென் இலங்கையில் வாழும் 60 லட்சம் மக்கள்தான் இந்த ஆட்சியாளா்களைத் தோ்வு செய்துள்ளனா். அவா்கள் இப்போது அனுபவிக்கின்றனா். தமிழா்களைப் பொருத்தவரை இதை 30 ஆண்டுகளாக அனுபவித்து வருகிறோம்.
எனவே சா்வதேச விசாரணை நடத்தி, இன அழிப்பு நிகழாது என்ற உத்தரவாதத்தை எங்களுக்கு அளிக்க வேண்டும். எங்களது மக்கள் நிம்மதியாக வாழலாம் என்ற நிலையை உருவாக்க வேண்டும். எங்களுடைய போராட்டத்துக்கான நியாயத்தை எட்ட வேண்டும் என்றாா் அனந்தி சசிதரன்.
அப்போது, புரட்சிக்கவி அறக்கட்டளை நிறுவனத் தலைவா் கே. பத்மா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G