கும்பகோணத்தில் காயத்திரி காளியம்மன் திருநடன உற்சவம்
By DIN | Published On : 05th August 2022 03:36 PM | Last Updated : 05th August 2022 03:36 PM | அ+அ அ- |

கும்பகோணம்: கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ காயத்திரி காளியம்மன் ஆடி மாத திருநடன உற்சவத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு காளியம்மனின் திருநடன காட்சியினை கண்டு ரசித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான இலுப்பையடி தர்மராஜா திரௌபதி அம்மன் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ காயத்திரி காளியம்மனுக்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் காப்புக் கட்டி திருநடன திருவிழா நடைபெறுவது வழக்கம்.
கடந்த இரு ஆண்டுகளாக கரோனா பேரிடர் காரணமாக திருவிழா நடைபெறாத நிலையில், இவ்வாண்டு இவ்விழா கடந்த ஜூலை மாதம் 31 ஆம் தேதி ஞாயிறு அன்று காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஸ்ரீ காயத்திரி காளியம்மன் திருநடன திருவீதியுலா இன்று நாதஸ்வர மேளதாள மங்கல வாத்தியங்கள் முழங்க, திருக்கோயில் வளாகத்தில் இருந்து துவங்கியது.
முன்னதாக ஏராளமான பெண்கள் தாய் வீட்டு சீதனமாக தேங்காய், பழங்கள், பூக்கள், பூ மாலைகள் கொண்ட வரிசை தட்டுக்கள் ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வந்தனர். தொடர்ந்து கோயிலில் இருந்து வெளியே வந்த காயத்திரி காளியம்மனை கோயில் சன்னதி முன்பு சுற்றிலும் கூடியிருந்த நூற்றுக்கணக்காண பெண்கள் உள்பட ஆயிரக்கணக்காண பக்தர்கள் நான்கு புறமும் சூழ்ந்து நின்று பூமாரி பொழிய, மலர் மாலைகள் அணிவித்தும், காளியம்மன் உற்சாகமாக வரவேற்க, லட்சுமி விலாஸ் தெரு, உப்புக்காரத்தெரு, ஆயிக்குளம் சாலை, ஹாஜியார் தெரு என நான்கு வீதி சந்திப்பில், திருநடனம் புரிந்தார்.
அப்போது, திருநடனம் புரிந்து வீதியுலாவாக வந்த ஸ்ரீ காயத்திரி காளியம்மனை ஏராளமானோர் தரிசனம் செய்தும், அவரிடம் பிராத்தனைகள் செய்தும் வழிபட்டு மகிழ்ந்தனர்.
இதையும் படிக்க: பயணத்தில் எச்சரிக்கை தேவை இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்
இதைத்தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியாக வருகிற ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை காயத்திரி ஜபம், மூலமந்திர ஜபமும், அதனைத் தொடர்ந்து பல்வேறு மூலிகை பொருள்களை கொண்டு ஸ்ரீ காயத்திரி ஹோமமும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடதக்கது.