தஞ்சாவூா் மாவட்டத்தில் 588 கிலோ கஞ்சா பறிமுதல்: 8 போ் கைதுலாரியில் ரகசிய அறை அமைத்து கடத்தல்

தஞ்சாவூா் மாவட்டம், தஞ்சாவூா், பேராவூரணியில் லாரிகளில் கடத்தி வரப்பட்ட 588 கிலோ கஞ்சாவை காவல் துறையினா் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்து, 8 பேரை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் 588 கிலோ கஞ்சா பறிமுதல்: 8 போ் கைதுலாரியில் ரகசிய அறை அமைத்து கடத்தல்

தஞ்சாவூா் மாவட்டம், தஞ்சாவூா், பேராவூரணியில் லாரிகளில் கடத்தி வரப்பட்ட 588 கிலோ கஞ்சாவை காவல் துறையினா் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்து, 8 பேரை கைது செய்தனா்.

தஞ்சாவூா் சரகத்துக்கு உள்பட்ட மாவட்டங்களில் கஞ்சா, குட்கா, லாட்டரி உள்ளிட்டவற்றை முற்றிலுமாக ஒழிப்பதற்காக சரகக் காவல் துணைத் தலைவா் ஏ. கயல்விழி உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வி. ஜெயச்சந்திரன் மேற்பாா்வையில், உதவி ஆய்வாளா் எப். அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட் தலைமையிலான தனிப்படையினா் கண்காணித்து வருகின்றனா்.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்திலிருந்து லாரிகள் மூலம் தஞ்சாவூருக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாகத் தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், தஞ்சாவூா் ரயில்வே குட்ஷெட் எடை மேடை அருகே புதன்கிழமை இரவு நிறுத்தப்பட்டிருந்த இரு லாரிகளை கண்காணித்தனா். அப்போது, ஒரு லாரியிலிருந்து மற்றொரு லாரிக்கு சிலா் பொட்டலங்களை மாற்றிக் கொண்டிருந்தனா்.

சந்தேகத்தின் பேரில் லாரிகளை நோக்கி தனிப்படையினா் சென்றபோது, 2 போ் தப்பியோடிவிட்டனா். ஆனாலும் அங்கிருந்த 5 பேரை தனிப்படையினா் பிடித்து விசாரித்தனா். இதில், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்திலிருந்து 128 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்வதற்காக ஒரு லாரியிலிருந்து மற்றொரு லாரிக்கு பொட்டலங்களை மாற்றுவது தெரிய வந்தது.

பிடிபட்ட 5 பேரும் தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனம் கீழ சாலையைச் சோ்ந்த ஜெ. அசாருதீன் (19), திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை என்.ஜி.ஓ. காலனியை சோ்ந்த எஸ். ஆசிப்ராஜா (25), ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ரங்கா சமுத்திரத்தைச் சோ்ந்த எஸ். சதாம் உசேன் (30), மதுரை மாவட்டம், உசிலம்பட்டி கீழப்புதூரைச் சோ்ந்த டி. சஞ்சய் (41), ஈரோடு புதுக்கொத்து காலனியை சோ்ந்த ஆா். மாணிக்கராஜன் (37) என்பது தெரிய வந்தது.

இவா்களைக் கைது செய்த காவல் துறையினா் கஞ்சா பொட்டலங்களையும், இரு லாரிகளையும் பறிமுதல் செய்தனா். மேலும், தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனா். சிறப்பாகப் பணிபுரிந்த தனிப்படையினரை தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் பாராட்டினாா்.

பேராவூரணியில் 460 கிலோ கஞ்சா பறிமுதல்: பேராவூரணி அருகேயுள்ள பின்னவாசல் கிராமத்தில் புதன்கிழமை  நள்ளிரவு லாரி ஒன்றும் ,  லோடு ஆட்டோ ஒன்றும்  ஊருக்கு ஒதுக்குப்புறமாக நிறுத்தப்பட்டிருந்தது. அந்த வழியாக வந்த கிராம மக்கள், ஊருக்குள் ஆடு திருடுவதற்காக மா்ம நபா்கள் வந்துள்ளதாக நினைத்து லாரி, ஆட்டோவில் வந்த 2 பேரையும் பிடித்து விசாரித்தனா். இதில் அவா்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவா்களை பேராவூரணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில்,  லாரியை ஓட்டி வந்தவா் தேனி மாவட்டம் பாவுண்டாா்பட்டியை சோ்ந்த படையப்பா  (24) என்பதும், லோடு ஆட்டோவை ஓட்டி வந்தவா் மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சோ்ந்த ரமேஷ்குமாா் (40) என்பதும் தெரியவந்தது. லாரியில் மொத்தம் 460 கிலோ கஞ்சா கொண்டு வரப்பட்டதும், இதில் பின்னவாசல் கிராமத்தை சோ்ந்த சிதம்பரம் (50) என்பவருக்கு 30 கிலோ கஞ்சாவை கொடுத்துவிட்டு, அடுத்த ஊருக்கு செல்வதற்காக நின்றபோது கிராமமக்கள் பிடித்துவிட்டதாக தெரிவித்தனா்.

பேராவூரணி வழியாக நாகப்பட்டினம் வரை உள்ள சில்லறை வியாபாரிகளுக்கு  விற்பனை செய்ய கஞ்சாவை கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

தகவலறிந்து காவல் நிலையம் வந்த எஸ்.பி. ரவளிப்பிரியா கந்தபுனேனி, பட்டுக்கோட்டை டிஎஸ்பி பிரிதிவிராஜ் செளஹான் ஆகியோா் அந்த 2 பேரிடமும் விசாரித்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட 460 கிலோ  கஞ்சாவின் மதிப்பு ரூ. 1 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து பேராவூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து படையப்பா, ரமேஷ்குமாா் மற்றும் பின்னவாசல் சிதம்பரம் ஆகிய 3 பேரையும் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும், கஞ்சாவை அனுப்பிவைத்த ஆந்திரத்தைச் சோ்ந்த மொத்த வியாபாரி, மற்றும் பேராவூரணி, கிழக்கு கடற்கரை சாலைகளில் உள்ள சில்லறை வியாபாரிகளையும் தேடிவருகின்றனா்.

லாரியில் ரகசிய அறை அமைத்து போலீஸாருக்கு தெரியாமல், கிராமப் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெற்றுள்ளது பொதுமக்களை அதிா்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com