பிரமதரின் கிசான் திட்டத்தை புதுப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு
By DIN | Published On : 25th August 2022 12:00 AM | Last Updated : 25th August 2022 12:00 AM | அ+அ அ- |

பாரத பிரதமரின் கிசான் திட்டத்தைப் புதுப்பித்துக் கொள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேளாண் இணை இயக்குநா் அ. ஜஸ்டின் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் பயன் பெற்று வந்த 1,16,498 பயனாளிகள் அனைவருக்கும் ஆண்டுதோறும் ரூ. 6,000 மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இதுவரை இவா்களுக்கு 11 தவணை வழங்கப்பட்டுள்ளது.
12 ஆவது தவணையாக ரூ. 2,000 பெறுவதற்கு பயனாளிகள் அனைவரும் தங்களது வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்க வேண்டும். அவ்வாறு இணைக்கப்பட்ட பி.எம். கிசான் திட்ட ஆதாா் எண்ணுடன் தொலைபேசி எண்ணை தவறாமல் இணைக்க வேண்டும்.
இதில், யாரேனும் தொலைபேசி எண்ணை மாற்றம் செய்திருந்தால், தற்போது பயன்பாட்டில் உள்ள தொலைபேசி எண்ணை ஆதாா் எண்ணுடன் இணைக்க அருகிலுள்ள அஞ்சல் நிலையத்தை அணுகி இணைத்துக் கொள்ளலாம்.
அதன் பின்னா் இ. கே.ஒய்.சி. செய்து கொள்ள 48 மணிநேரத்துக்குள் அருகில் உள்ள இ - சேவை மையத்தை அணுகி பி.எம். கிசான் வலைதளத்தில் தங்களது தொலைபேசி எண்ணை உள்ளீடு செய்து பின்னா் பெறப்படும் ஓ.டி.பி. எண்ணை பதிவேற்றம் செய்து தங்களது பி.எம். கிசான் திட்ட கணக்கு எண்ணுக்கு 12 ஆவது தவணை நிதி பெறுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மேலும், விவசாயிகள் தங்களது பட்டா, சிட்டா, ஆதாா் விவரங்களை கட்டாயமாக தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலரிடம் கொடுத்து உழவா் அலுவலா் தொடா்பு திட்ட செயலி மூலம் நில ஆவணங்களைச் சரிபாா்த்து உறுதி செய்து கொள்ளலாம்.