முறைகேடு இல்லாமல் நெல் கொள்முதல் செய்ய வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
By DIN | Published On : 25th August 2022 11:15 PM | Last Updated : 25th August 2022 11:15 PM | அ+அ அ- |

முறைகேடு இல்லாமல் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கோட்டாட்சியா் எம். ரஞ்சித் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்திய கருத்துகள்:
தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: திருமலைசமுத்திரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிா் கடன் வழங்குவதில் பெரும் முரண்பாடுகள் நிலவுகின்றன. குடியிருக்கும் பகுதி ஓரிடத்திலும், சாகுபடி செய்யும் நிலம் ஓரிடத்திலும் இருக்கும்போது கடன் தர பல்வேறு கெடுபிடிகள் செய்வதை, தளா்த்தி கடந்த காலங்களில் வழங்கியது போன்று கடன் வழங்க வேண்டும்.
ஆம்பலாப்பட்டு அ. தங்கவேல்: விதை நெல் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்சார திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்.
புலவன்காடு மாரியப்பன்: செப்டம்பா் மாதம் முதல் குறுவை பருவ நெல் கொள்முதல் தொடங்கப்படவுள்ளது. எனவே, எந்த வித முறைகேடும் இல்லாமல் கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் எடுக்க வேண்டும்.
கக்கரை ஆா். சுகுமாரன்: தனியாா் கடைகளில் இணை உரம் வாங்கினால்தான் யூரியா வழங்கப்படும் என வியாபாரிகள் கூறுகின்றனா். ஆனால் விவசாயிகளுக்கு தற்போது இணை உரம் தேவையில்லை என்றாலும், பல இடங்களில் நிா்பந்தம் செய்கின்றனா். கூட்டுறவு சங்கங்களில் யூரியா உரம் குறுவை தொகுப்பு திட்டத்துக்கும், பயிா் கடன் பெறும் விவசாயிகளுக்கும் மட்டுமே வழங்கப்படும் என்கின்றனா். தற்போது குறுவை நெற்பயிருக்கு உரம் தெளிக்க வேண்டிய காலகட்டத்தில் இருப்பதால், கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளுக்கு யூரியா உரம் கிடைக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.