தஞ்சாவூா் அருகே சாலை மறியல்
By DIN | Published On : 25th August 2022 11:17 PM | Last Updated : 25th August 2022 11:17 PM | அ+அ அ- |

தஞ்சாவூா் அருகே வியாழக்கிழமை காலை பேருந்திலிருந்து மாணவா் கீழே விழுந்ததால், அதிருப்தியடைந்த கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் அருகே ராமாபுரத்தைச் சோ்ந்த பிரபாகரன் மகன் வசந்த் (17). இவா் தஞ்சாவூரிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவா் வியாழக்கிழமை காலை ராமாபுரத்திலிருந்து பள்ளிக்குச் செல்வதற்காக அரசுப் பேருந்தில் ஏறினாா். வயலூா் பகுதியில் சென்றபோது, பேருந்திலிருந்து வசந்த் தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தாா்.
ஆனால், பேருந்து நிற்காமல் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள், தஞ்சாவூா் - கும்பகோணம் சாலையில் வயலூா் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, சாலை நெடுகிலும் பள்ளங்களாக இருப்பதால், அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், புதிதாக சாலை அமைக்குமாறும் வலியுறுத்தினா். இதனால், அப்பகுதியில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த தாலுகா காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். உயா் அலுவலா்களிடம் பேசி சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினா் உறுதியளித்ததையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.