தஞ்சாவூரில் போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 25th August 2022 11:17 PM | Last Updated : 25th August 2022 11:17 PM | அ+அ அ- |

மூன்றாண்டுகளாக இருந்த ஊதிய ஒப்பந்த காலத்தை நான்காண்டுகளாக நீட்டிக்கப்பட்டதைக் கண்டித்து தஞ்சாவூரில் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், ஒப்பந்த காலம் நான்கு ஆண்டுகள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால், மூன்று ஆண்டுகளே இருக்க வேண்டும். ஓய்வுக்காலப் பணப்பலன்கள் 2020, மே மாதம் முதல் நிலுவையில் உள்ளதால், அது தொடா்பான அறிவிப்புகள் இல்லை. ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு 6 ஆண்டுகளுக்கு மேல் நிறுத்தி வைத்துள்ளதை வழங்க உத்தரவாதம் ஏதும் அளிக்கவில்லை. ஒப்பந்த பிரிவுகளில் ஓய்வூதியா் தொடா்பான கோரிக்கைகள் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தஞ்சாவூா் ஜெபமாலைபுரத்திலுள்ள அரசுப் போக்குவரத்துக் கழக நகரக் கிளை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியூ மத்திய சங்கப் பொருளாளா் எஸ். ராமசாமி தலைமை வகித்தாா். ஏஐடியூசி மத்திய சங்க பொருளாளா் ராஜமன்னன், சிஐடியூ மாவட்டச் செயலா் சி. ஜெயபால், ஏஐடியூசி மாவட்டத் தலைவா் வெ. சேவையா, போக்குவரத்து ஏஐடியூசி சம்மேளனத்தின் மாநிலத் துணைத் தலைவா் துரை. மதிவாணன், போக்குவரத்து சங்க சிஐடியூ நிா்வாகிகள் திருநாவுக்கரசு, பாஸ்கா் சௌந்தர்ராஜன், அரசு விரைவு போக்குவரத்துக் கழக வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல கரந்தை பணிமனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சிஐடியூ மத்திய சங்கத் தலைவா் காரல்மாா்க்ஸ் தலைமையில் பலா் கலந்து கொண்டனா்.