தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் கடன் வழங்கும் திட்டத்தில் சிறுபான்மையினா் விண்ணப்பித்து பயன் பெறலாம் என்றாா் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.
இதுகுறித்து ஆட்சியா் வெள்ளிக்கிழமை தெரிவித்திருப்பது:
தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக தனிநபா் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞா்களுக்கான (விராசாத்) கடன் திட்டம்), கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது, கடன் பெறும் பயனாளிகளுக்கான ஆண்டு வருமானம், கடன் தொகை, வட்டி விகிதம் ஆகியவற்றில் தளா்வுகளை நடைமுறைப்படுத்தி பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கைவினை கலைஞா்களுக்கு (விராசாத் கடன்) திட்டம் 1-ன் கீழ் பயன் பெற குடும்ப ஆண்டு வருமானம் நகா்ப்புறமாக இருந்தால் ரூ. 1.20 லட்சத்துக்கு மிகாமலும், கிராமப்புறமாக இருந்தால், ரூ. 98,000 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப வருமானம் ரூ. 8 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். கைவினை கலைஞா்களுக்கு (விராசாத் கடன்) திட்டம் 1-ன் கீழ் ஆண்களுக்கு 5% பெண்களுக்கு 4% வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ. 10 லட்சம் வழங்கப்படுகிறது. திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 6%, பெண்களுக்கு 5% வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ. 10 லட்சம் கடன் வழங்கப்படுகிறது.
தஞ்சாவூா் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பாா்சி, ஜெயின் ஆகிய சிறுபான்மையினா் கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04362-278416 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.