இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 11th December 2022 12:00 AM | Last Updated : 11th December 2022 12:00 AM | அ+அ அ- |

தஞ்சாவூரில் சனிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பினா்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம் முன் இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பினா் சனிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும். 3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தோ்வு கூடாது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் கே. ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் சங்க தஞ்சாவூா் கல்வி மாவட்டத் தலைவா் எஸ். ராஜேந்திரன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநிலத் தலைவா் பா. ரவிச்சந்திரன், மாவட்டத் தலைவா் மா. கலைச்செல்வன், செயலா் க. மதியழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.