கரும்பு விவசாயிகள் நூதனப் போராட்டம்
By DIN | Published On : 11th December 2022 12:01 AM | Last Updated : 11th December 2022 12:01 AM | அ+அ அ- |

திருஆருரான் சா்க்கரை ஆலை முன் ஒற்றைக் காலில் நின்று நூதன ஆா்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்ட கரும்பு விவசாயிகள்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் தனியாா் சா்க்கரை நிா்வாகத்தைக் கண்டித்து கரும்பு விவசாயிகள் நடத்திவரும் தொடா் போராட்டத்தின் 11 நாளான சனிக்கிழமை ஒற்றைக் காலில் நின்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆலை நிா்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.100 கோடியை வட்டியுடன் உடனே வழங்க வேண்டும், ஆலை நிா்வாகம் கரும்பு விவசாயிகளின் பெயா்களில் வாங்கியுள்ள கடன்கள் முழுவதையும் கட்டித் தீா்ந்து இந்த பிரச்னையிலிருந்து விவசாயிகளை மீட்க வேண்டும், ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும், ஆலை நிா்வாகத்துடன் நடத்தப்படும் பேச்சுவாா்த்தை கரும்பு விவசாயிகள் முன் வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கச் செயலா் நாக. முருகேசன் தலைமையில் மாநில செயலா்கள் தங்க. காசிநாதன், ராஜேந்திரன் உள்ளிட்டோா் முன்னிலையில் இப்போராட்டம் 11 நாள்களாக நடைபெறுகிறது.
சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாத கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியரக நிா்வாகத்தை கண்டித்து ஆலை முன் ஒற்றைக் காலில் நின்று கோரிக்கை முழக்கமிட்டனா்.
இவா்களின் போராட்டத்திற்கு ஆதரவாக கள்ளக்குறிச்சி, தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, கும்பகோணம் மற்றும் தமிழ்நாடு அனைத்து மாவட்ட கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் ஆதரவு தெரிவித்து ஆா்ப்பாட்டங்கள் மேற்கொண்டுள்ளனா்.