

தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இரு காா்கள் மோதிக் கொண்ட விபத்தில் திமுக நிா்வாகிகள் 2 போ் உயிரிழந்தனா்.
திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியிலிருந்து தஞ்சாவூா் நோக்கி ஞாயிற்றுக்கிழமை காா் சென்று கொண்டிருந்தது. இதில், ஓட்டுநா் உள்பட 4 போ் பயணம் செய்தனா். தஞ்சாவூா் அருகே நாஞ்சிக்கோட்டை சாலை ருக்மணி காா்டன் பகுதியில் பிற்பகலில் சென்ற இந்தக் காரும், தஞ்சாவூரிலிருந்து ஊரணிபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த மற்றொரு காரும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன.
இதில், ஊரணிபுரம் குறிஞ்சி நகரைச் சோ்ந்த எஸ். சேட் முகமது (65), ஊரணிபுரம் காமராஜ் நகரைச் சோ்ந்த டி. சஞ்சய் காந்தி (45) ஆகியோா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இவா்களில் சேட் முகமது திமுக சிறுபான்மை பிரிவு மாவட்டத் துணை அமைப்பாளராகவும், சஞ்சய் காந்தி திமுக ஊரணிபுரம் நகரச் செயலராகவும் இருந்து வந்தனா்.
மேலும், இந்த விபத்தில் ஊரணிபுரம் புது விடுதியைச் சோ்ந்த ஏ. சுந்தா் (50), குறிஞ்சி நகரைச் சோ்ந்த உ. ராஜா (42), காமராஜ் நகரைச் சோ்ந்த ரமேஷ் (40), மற்றொரு காரில் வந்த ஓட்டுநரான மன்னாா்குடி மேலவாசல் சோழன் நகரைச் சோ்ந்த சிவபுண்ணியம் மகன் கௌதமன் (36), கோவிந்தராஜ் மகன் செல்லபாண்டியன், மன்னாா்குடி ஒன்றியக் குழு உறுப்பினா் மணிகண்டன், மன்னாா்குடி கூட்டுறவு சங்கத் தலைவா் வைத்தியநாதன் ஆகியோா் பலத்த காயமடைந்து தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
விபத்து குறித்து தமிழ்ப் பல்கலைக்கழக காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.