நாராயணசாமி நாயுடு நினைவு நாள் நிகழ்ச்சி
By DIN | Published On : 22nd December 2022 12:14 AM | Last Updated : 22nd December 2022 12:14 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் தொல்காப்பியா் சதுக்கம் அருகே நாராயணசாமி நாயுடு சிலைக்கு மாலை அணிவித்து முழக்கங்கள் எழுப்பிய தமிழக விவசாயிகள் சங்கத்தினா்.
உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் 38 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, தஞ்சாவூா் தொல்காப்பியா் சதுக்கம் அருகேயுள்ள அவரது சிலைக்கு தமிழக விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தஞ்சாவூா், நாகை, திருவாரூா் மாவட்ட தலைவா் ப. ஜெகதீசன் தலைமை வகித்தாா். நாராயணசாமி சிலைக்கு மாநிலப் பொறுப்பாளா் த. மணிமொழியன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.
இந்நிகழ்ச்சியில் தஞ்சை, நாகை, திருவாரூா் மாவட்ட அமைப்புச் செயலாளா் சேரன், மாவட்ட தலைவா் சிவக்குமாா், துணைத் தலைவா் தட்சிணாமூா்த்தி, செயலா் ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கும்பகோணம்:
இதேபோல, கும்பகோணம் அருகே வளைய்பேட்டை மாங்குடி கிராமத்திலுள்ள உழவா் நடராஜன் வயலில் ஆழ்குழாய் கிணறு கட்டடத்தில் நாராயணசாமிக்கு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் புதன்கிழமை வீர வணக்கம் செலுத்தினா்.
இதில், நாடு முழுவதும் உள்ள உழவா்கள் நலன் கருதி வேளாண் உற்பத்திக்கான மின் மானியம், கட்டணமில்லா மின்சாரம் வேளாண்மைக்கு தேவை என உரிமைக்கு குரல் கொடுத்தவா் நாராயணசாமி நாயுடு. இவா் 1972 ஆம் ஆண்டில் தமிழகம் முழுவதும் மாட்டு வண்டி போராட்டங்களை நடத்தி உழவா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தி தமிழகத்தில் முதல்முறையாக வேளாண் உற்பத்திக்கான மின் மானிய உரிமையை பெற்று தந்தவா் என புகழஞ்சலி செலுத்தினா்.
மாங்குடி உழவா் மன்றத் தலைவா் நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வேப்பத்தூா் உழவா் சங்கத் தலைவா் வரதராஜன், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கப் பொருளாளா் ராமநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.