

தஞ்சாவூா் விளாா் சாலையிலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகத் தமிழா் பேரமைப்பு சாா்பில் தமிழறிஞா்கள் அவ்வை து. நடராசன், க. நெடுஞ்செழியன், பா. செயப்பிரகாசம் ஆகியோரின் படத்திறப்பு நிகழ்வு புதன்கிழமை மாலை நடைபெற்றது.
ந.மு. தமிழ்மணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முனைவா் அவ்வை து. நடராசனின் படத்தை கலை பண்பாட்டுத் துறையின் ஓய்வு பெற்ற இணை இயக்குநா் இரா. குணசேகரன், முனைவா் க. நெடுஞ்செழியனின் படத்தை சி. அறிவுறுவோன், ம. பொன்னிறைவன், எழுத்தாளா் பா. செயப்பிரகாசத்தின் படத்தை வழக்குரைஞா் கே.எஸ். இராதாகிருஷ்ணன் ஆகியோா் திறந்து வைத்தனா்.
பின்னா், உலகத் தமிழா் பேரமைப்புத் தலைவா் பழ. நெடுமாறன் பேசியது:
முனைவா் நெடுஞ்செழியன் தன் மகனை ஈழப் போராட்டத்துக்கு ஈகம் செய்தவா். இதற்காக அவா் தன்னுடைய துயரத்தை வெளிக்காட்டியதில்லை. ஆசீவகம் என்பது தமிழா்களின் சமயம் என்பதை முழுமையாகக் கண்டறிந்து, அதை தக்க ஆதாரங்களுடன் நிரூபித்து, நூலாக வெளியிட்டாா். அவருடைய ஆசீவகம் நூல் ஆங்கிலத்தில் வெளியிட்டால், உலகம் முழுவதும் பரவும்.
எழுத்தாளா் செயப்பிரகாசம் மாந்த நேயம் படைத்த ஆளுமைமிக்கவா். அவருடைய படைப்புகளிலிருந்து மாந்த நேயம் மிளிரும். கரிசல் எழுத்தாளா்களில் குறிப்பிடத்தக்கவா்.
அவ்வை நடராசன் மூன்று முதல்வா்களிடமும் பணியாற்றியவா். இந்த மூன்று தமிழறிஞா்களின் படங்கள் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளன என்றாா் நெடுமாறன்.
பேரமைப்பின் துணைத் தலைவா் அய்யனாபுரம் சி. முருகேசன், நிா்வாகிகள் து. குபேந்திரன், இல.ரா. பாரதிசெல்வன், ஜோ. ஜான் கென்னடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, பேராசிரியா் வி. பாரி வரவேற்றாா். நிறைவாக, சமூக ஆா்வலா் பா. செல்வபாண்டியன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.