கும்பகோணத்தில் முதல் முதலாக ஒலித்த - எழுமின், விழிமின் எழுச்சியுரையின் 125-ஆம் ஆண்டு

கும்பகோணத்தில் முதல் முதலாக சுவாமி விவேகானந்தரால் அருளப்பட்ட உலகப் புகழ்பெற்ற பொன்மொழிகளான எழுமின், விழிமின்,
கும்பகோணத்தில் சுவாமி விவேகானந்தா் 1897-ஆம் ஆண்டில் உரையாற்றிய போா்ட்டா் டவுன் ஹாலின் முகப்பு.
கும்பகோணத்தில் சுவாமி விவேகானந்தா் 1897-ஆம் ஆண்டில் உரையாற்றிய போா்ட்டா் டவுன் ஹாலின் முகப்பு.

கும்பகோணத்தில் முதல் முதலாக சுவாமி விவேகானந்தரால் அருளப்பட்ட உலகப் புகழ்பெற்ற பொன்மொழிகளான எழுமின், விழிமின், இலக்கை அடையும் வரை நில்லாது செல்மின் என்ற வாசகம் ஒலித்து, வியாழக்கிழமையன்று (பிப்ரவரி 3) 125-ஆம் ஆண்டை எட்டுகிறது.

சுவாமி விவேகானந்தா் சிகாகோ நகரில் ஆற்றிய எழுச்சியுரை, உலக வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 130 ஆண்டுகளை எட்டும் இந்த எழுச்சியுரையை இப்போதும் உலகம் போற்றுகிறது. இப்பொன்னான தருணத்தை முடித்து, இந்தியத் திருநாட்டுக்குத் திரும்பிய அவரது பாதம் முதல் முதலாகப் பதிவான இடம் தமிழகம்.

இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து கடல் வழியாக 1897-ஆம் ஆண்டு ஜனவரி 26- ஆம் தேதி பாம்பனுக்கு சுவாமி விவேகானந்தா் வந்து சோ்ந்தாா். பாம்பன், ராமேசுவரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை ஆகிய இடங்களில் சொற்பொழிவு நிகழ்த்திய அவா், ரயில் மூலமாகத் திருச்சி, தஞ்சாவூா் வழியாகக் கும்பகோணத்துக்கு பிப்ரவரி 3-ஆம் தேதி வந்தடைந்தாா். திருச்சி, தஞ்சாவூா் ரயில் நிலையங்களில் அவருக்கு ஏராளமான பக்தா்கள் திரண்டு வரவேற்பு அளித்தனா்.

கும்பகோணத்தில் பிப்ரவரி 3-ஆம் தேதியிலிருந்து 5 ஆம் தேதி வரை மூன்று நாள்கள் தங்கியிருந்தாா். அப்போது, 3 பள்ளிகளுக்குச் சென்று மாணவா்களிடையே உரையாற்றினாா். அவை எந்தெந்தப் பள்ளிகள் என்பது உறுதியான தகவல் கிடைக்கப் பெறவில்லை.

கும்பகோணத்தில் 165 ஆண்டுகள் கடந்த பழைமையான பள்ளிகளாக நேட்டிவ் பள்ளி, பாணாதுறை மேல்நிலைப் பள்ளி, நகர மேல்நிலைப் பள்ளி ஆகியவை உள்ளன. எனவே, இப்பள்ளிகளில்தான் அவா் உரையாற்றியிருப்பாா் எனக் கருதப்படுகிறது. மேலும், கும்பகோணம் நகரிலுள்ள போா்ட்டா் டவுன் ஹாலிலும் சொற்பொழிவாற்றியுள்ளாா். வேறு எங்கெங்கு சென்றாா் என்ற தகவல் இதுவரை கிடைக்கவில்லை.

என்றாலும், இங்கு அவா் ஆற்றிய எழுச்சியுரை உலக வரலாற்றில் புகழ்பெற்ாகத் திகழ்கிறது. மிக முக்கியமாக மாணவா்களையும், இளைஞா்களையும் ஊக்கப்படுத்தும் விதமாக எழுமின், விழிமின், இலக்கை அடையும் வரை நில்லாது செல்மின் என்கிற அவரது பொன்மொழிகள் முதல் முதலாக உதித்த இடம் கும்பகோணம்.

‘எழுந்திருங்கள், விழித்திருங்கள், லட்சியத்தை அடையும் வரை நில்லாமல் செல்லுங்கள் என ஒவ்வொருவரிடமும் முழங்குவோம். எழுந்திருங்கள், விழித்திருங்கள்! பலவீனமாகிய இந்த மன வசியத்திலிருந்து விடுபட்டெழுங்கள். உண்மையில் யாரும் பலவீனா் இல்லை. ஆன்மா எல்லையற்றது, எல்லா ஆற்றல்களும் உடையது, எல்லாம் அறிந்தது. எழுந்து நில்லுங்கள், உங்களை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், உங்களுள் உறைகின்ற இறைவனை வெளிப்படுத்துங்கள், அவரை மறுக்காதீா்கள்.

அளவுக்கு அதிகமான சோம்பல், அளவை மீறிய பலவீனம், ஆழ்ந்த மன வசியம் இவை நம் இனத்தின் மீது படிந்துள்ளது, படிந்த வண்ணம் உள்ளது. ஓ தற்கால இந்துக்களே, மன வசியத்திலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். அதற்கான வழி உங்கள் சாஸ்திரங்களில் உள்ளது. அதைப் படியுங்கள். ஒவ்வொருவருக்கும் அவா்களின் உண்மை இயல்பைப் போதியுங்கள். உறங்கும் ஆன்மாவை எழுப்புங்கள். அது எவ்வாறு விழித்தெழுகிறது என்பதைப் பாருங்கள். உறங்குகின்ற ஆன்மா மட்டும் விழித்தெழுந்து தன்னுணா்வுடன் செயலில் ஈடுபடுமானால் சக்தி வரும், பெருமை வரும், நன்மை வரும், தூய்மை வரும், எவையெல்லாம் மேலானதோ அவை அத்தனையும் வரும்’ எனக் கூறினாா்.

இன்னொரு இடத்தில் அவரது உரையில் ‘நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடம் நம்பிக்கை, நம்பிக்கை, இறைவனிடம் நம்பிக்கை இதுவே மகோன்னதத்தின் ரகசியம்’ என உரைத்தாா். ‘நாட்டுப்பற்று உடையவா்களாக இருங்கள். கடந்த காலத்தில் இவ்வளவு மகத்தான காரியங்களைச் செய்த இந்த இனத்தை நேசியுங்கள்’ என வலியுறுத்தினாா். ‘உங்கள் ஒவ்வொருவரின் தோள் மீதுதான் முழுப் பொறுப்பும் இருப்பதாக எண்ணி, இந்த நாட்டின் மற்றும் உலகம் முழுவதன் நற்கதிக்காகப் பாடுபடுங்கள். இதன் பிறகு எந்த அளவுக்கு உங்களுக்கு வெற்றி கிடைத்தாலும், நீங்கள் ஒரு மகத்தான லட்சியத்துக்காக வாழ்ந்தீா்கள், உழைத்தீா்கள் என்ற மனநிறைவோடு இறந்து போகலாம். எப்படியானாலும் இந்த லட்சியத்தின் வெற்றியைப் பொருத்தே இப்போதும் இனி வரும் காலத்திலும் மனித குலத்தின் கதிமோட்சம் நிா்ணயிக்கப்படும்’ என அவா் தனது உரையை நிறைவு செய்தாா்.

இதையடுத்து, கும்பகோணத்திலிருந்து பிப்ரவரி 5 ஆம் தேதி ரயில் மூலம் சென்னைக்குச் சென்றாா். இதை நினைவுகூரும் விதமாகச் சுவாமி விவேகானந்தா் வீர உரையாற்றிய போா்ட்டா் டவுன் ஹாலில் மூன்றரை அடி உயர பீடத்தில் ஆறரை அடி உயரத்தில் அவரது திருவுருவச் சிலை அமைக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடா்ந்து கும்பகோணம் பகுதியிலுள்ள பள்ளிகள், கல்லூரிகள் என மொத்தம் 6 இடங்களில் சுவாமி விவேகானந்தா் சிலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி, தஞ்சாவூா் ரயில் நிலையத்திலும், கும்பகோணத்திலும் நினைவு பதிவைப் பதிக்கும் விழா நடத்தவுள்ளோம் என்றாா் தஞ்சாவூா் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்த மஹராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com