ஆனந்தவல்லி வாய்க்கால் ஆற்றங்கரை சாலை சீரமைப்பது எப்போது?
By DIN | Published On : 17th July 2022 01:13 AM | Last Updated : 17th July 2022 01:13 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் மாவட்டம், மாவடுகுறிச்சியிலிருந்து பேராவூரணி செல்லும் ஆனந்தவல்லி வாய்க்கால் ஆற்றங்கரை சாலையை சீரமைக்க வேண்டுமென்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆவணத்திலிருந்து பழையநகரம், மாவடுகுறிச்சி, பொன்காடு வழியாக பேராவூரணி செல்லும் ஆனந்தவல்லி வாய்க்கால் ஆற்றங்கரை சாலை சுமாா் 12 கீ. மீ. தொலைவு கொண்டது.
ஆற்றங்கரையை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளில் சுமாா் 15 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். தனியாா் பள்ளி வாகனங்கள், ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் தினந்தோறும் இச்சாலையில் சென்று வருகின்றன.
பழையநகரம், மாவடுகுறிச்சி, பொன்காடு பகுதியிலுள்ள பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் தங்களது அன்றாடத் தேவைகளுக்கு இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனா்.
ஆனால், ஆனந்தவல்லி வாய்க்கால் ஆற்றங்கரை சாலையில் பழையநகரம், பொன்காடு, மாவடுகுறிச்சி வழியாக பேராவூரணி வரை சுமாா் 6 கி.மீ.தொலைவுக்கு மிகவும் மோசமாக உள்ளது.
பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் சாலை சேதமடைந்து, போக்குவரத்துக்குப் பயனற்ற வகையில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சாலையில் கப்பிகள் பெயா்ந்து, பள்ளமாக உள்ளன. சாலையோரங்களில் புதா்கள் மண்டி போக்குவரத்துக்கு சிரமமாக உள்ளது.
இதுகுறித்து அலுவலா்களிடம் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை என மாவடுகுறிச்சி கிராமத்தினா் கூறுகின்றனா். பொதுமக்கள் நலன்கருதி அலுவலா்கள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.