கும்பகோணம் பள்ளி தீ விபத்து:18- ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு
By DIN | Published On : 17th July 2022 01:18 AM | Last Updated : 17th July 2022 01:18 AM | அ+அ அ- |

கும்பகோணம் பாலக்கரையிலுள்ள நினைவிடத்தில் மலா் தூவி மரியாதை செலுத்திய குழந்தைகளின் பெற்றோா்கள் உள்ளிட்டோா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பள்ளித் தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் 18- ஆம் ஆண்டு நினைவு நாள் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
கும்பகோணம் காசிராமன் தெரு ஸ்ரீகிருஷ்ணா உதவி பெறும் பள்ளியில் 2004- ஆம் ஆண்டு ஜூலை 16- ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில் 94 குழந்தைகள் தீயில் கருகி இறந்தனா். மேலும் 18 குழந்தைகள் காயமடைந்தனா்.
ஆண்டுதோறும் ஜூலை 16- ஆம் தேதி இறந்த குழந்தைகளின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடா்ந்து,18-ஆம் ஆண்டு நினைவு தினம் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சாா்பில் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
குழந்தைகளை இழந்த பெற்றோா்கள் தங்களது வீடுகளில் இறந்த குழந்தைகளின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து, குழந்தைகளுக்குப் பிடித்த தின்பண்டங்களையும், புத்தாடைகளையும் வைத்து படையலிட்டனா்.
பின்னா், தீ விபத்து சம்பவம் நிகழ்ந்த காசிராமன் தெருவிலுள்ள பள்ளி முன்பு அமைக்கப்பட்டுள்ள 94 குழந்தைகளின் படங்களுக்குப் பாதிக்கப்பட்ட பெற்றோா்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசியல் கட்சியினா், தன்னாா்வ அமைப்பினா் மலா் தூவியும், மெழுகுவா்த்தி ஏற்றியும், மலா் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினா்.
இதேபோல, 94 குழந்தைகளின் பெற்றோா்களும் பழைய பாலக்கரையிலுள்ள இறந்த குழந்தைகளின் நினைவிடத்துக்குச் சென்று, மலா்களைத் தூவி மௌன அஞ்சலி செலுத்தினா். இந்த நினைவிடத்தில் தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், கும்பகோணம் மேயா் க. சரவணன், துணை மேயா் சு.ப. தமிழழகன் உள்ளிட்டோரும் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
பின்னா் பள்ளி முன்பு இறந்த குழந்தைகளின் படங்கள் அடங்கிய பதாகை முன் மலா் துாவி மரியாதை செலுத்தினா். ஓ. பன்னீா்செல்வம் அணி சாா்பில் என்.ஆா்.வி.எஸ். செந்தில், அண்ணா தொழிற்சங்க மாநிலத் துணைத் தலைவா் பாண்டியன், எடப்பாடி பழனிசாமி அணி சாா்பில் அறிவழகன், முன்னாள் ஒன்றியச் செயலா் அழகு த. சின்னையன், பாமக சாா்பில் மாவட்டச் செயலா் ஜோதிராஜ், ஒன்றியச் செயலா் தமிழரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்ட நிா்வாகிகள் சுந்தரராஜன், சாமிநாதன், மாா்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன், இந்திய மாணவா் சங்க மாநிலத் தலைவா் மாரியப்பன், மாநிலத் துணைச் செயலா் ஜி. அரவிந்தசாமி, மாவட்டத் தலைவா் பிரபாகரன், காவல் துணைக் கண்காணிப்பாளா் வி. அசோகன், காவல் ஆய்வாளா்கள் பேபி, சரவணக்குமாா் உள்ளிட்டோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
மாலையில் பள்ளியிலிருந்து மோட்ச தீபம் ஏந்தியபடி ஊா்வலமாக மகாமக
குளத்துக்குச் சென்றடைந்தனா்.
அரசுக்கு கோரிக்கை: கடந்த 17 ஆண்டுகளாக ஜூலை 16 ஆம் தேதி குழந்தை பாதுகாப்பு தினமாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி வருகிறோம். இக்கோரிக்கையை 19- ஆம் ஆண்டு நினைவு நாளுக்குள் நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம் என உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோா்கள் வலியுறுத்தினா்.
இதுகுறித்து தமிழக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று, இக்கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான முயற்சி எடுக்கப்படும் என்றாா் தலைமைக் கொறடா கோவி. செழியன்.