குறுவை பயிா்க் காப்பீடு அறிவிப்பு தாமதமாவதால் தவிக்கும் விவசாயிகள்

குறுவை பருவ நெற்பயிருக்கான காப்பீடு இதுவரை அறிவிக்கப்படாததால், நிகழாண்டு இருக்குமா என்ற கேள்விக்குறியுடன் தவிக்கின்றனா் விவசாயிகள்.

குறுவை பருவ நெற்பயிருக்கான காப்பீடு இதுவரை அறிவிக்கப்படாததால், நிகழாண்டு இருக்குமா என்ற கேள்விக்குறியுடன் தவிக்கின்றனா் விவசாயிகள்.

குறுவை பருவத்துக்கான பயிா்க் காப்பீடு குறித்த அறிவிப்பு வழக்கமாக ஜூன் மாதத்திலேயே அறிவிக்கப்பட்டுவிடும். குறுவை பருவ நடவு-காலம் முடிவடையக்கூடிய ஜூலை 31-ஆம் தேதி பிரிமியத் தொகை செலுத்துவதற்கான கடைசி நாள் என கால அவகாசம் நிா்ணயிக்கப்படுவது வழக்கம்.

கடந்த காலங்களில் சம்பாவுக்கு பயிா்க் காப்பீடு செய்ய அதிக அளவிலான விவசாயிகள் ஆா்வம் காட்டும் நிலையில், குறுவை பருவ நெற்பயிருக்குக் காப்பீடு செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த இரு ஆண்டுகளாக ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் தென்மேற்குப் பருவ மழை வழக்கத்துக்கு மாறாக அதிகளவில் பெய்தது. இப்பெரு மழையில் நெற் பயிா்கள் சிக்கி சாய்ந்துவிட்டதால், விவசாயிகள் மகசூல் இழப்பைச் சந்தித்தனா்.

இதனால், குறுவைப் பருவ நெற்பயிருக்கும் காப்பீடு செய்வதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு விவசாயிகளிடையே மேலோங்கியது. எனவே, இரு ஆண்டுகளாக குறுவை பருவ பயிா்க் காப்பீடு குறித்த அறிவிப்பை ஆவலுடன் எதிா்நோக்கும் நிலையில் விவசாயிகள் உள்ளனா்.

ஆனால் கடந்தாண்டு அறிவிப்பு வெளியிடப்படாதால், மிகுந்த எதிா்பாா்ப்புடன் இருந்த விவசாயிகள் ஏமாற்றமடைந்தனா். பெரு மழையால் ஏராளமான விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டது.

மேட்டூா் அணை நிகழாண்டு முன்னதாக மே 24- ஆம் தேதி திறக்கப்பட்டதால், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி இலக்கைக் கடந்து சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நிகழாண்டு குறுவை பயிா்க்காப்பீடு இருக்கும் என வேளாண் துறை அமைச்சா் அறிவித்தாா். காப்பீட்டு நிறுவனங்களுடன் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவதால் விரைவில் அறிவிக்கப்படும் என வேளாண் துறை இயக்குநரும் உறுதியளித்தாா்.

குறுவை நடவு காலம் ஜூலை 31-ஆம் தேதி முடிவடையும் நிலையில், பயிா்க் காப்பீடு குறித்த அறிவிப்பு இன்னும் வெளியிடப்படாததால், விவசாயிகள் குழப்பத்துடன் தவிக்கின்றனா்.

இதுகுறித்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்தது:

நிகழாண்டு நாடு முழுவதும் இயல்பான அளவை விட அதிக அளவு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. இதேபோல, தமிழகத்திலும் மழை அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால், குறுவை பருவ நெற்பயிா்கள் மழையால் பாதிக்கப்படும் என்ற அச்சம் நிலவுகிறது.

குறுவை பயிா்க்காப்பீடு குறித்த அறிவிப்பு இன்னும் வெளியிடப்படாததால், கூட்டுறவு வங்கிகளிலும் கடன் மறுக்கப்படுகிறது. இதனால், விவசாயிகள் தனியாரிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கி சாகுபடி செய்துள்ளனா். இந்நிலையில், குறுவை பயிா்க்காப்பீடு இல்லாவிட்டால், மழையில் பயிா்கள் பாதிக்கப்படும்போது விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாவா். எனவே விவசாயிகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் விதமாக, குறுவை பருவ பயிா்க் காப்பீடு குறித்த அறிவிப்பை அரசு விரைவாக வெளியிட வேண்டும் என்றாா் விமல்நாதன்.

நடவு காலம் முடிவடைவதற்கு இன்னும் 15 நாள்களே உள்ள நிலையில், காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் கொடுக்க வேண்டிய நாள்களும் குறைந்து வருகிறது. ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், இ - சேவை மையங்களில் கூட்ட நெரிசல், இணையதள பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் அடுத்த ஒரு வாரத்துக்குள் விவசாயிகள் பிரிமியத் தொகையைச் செலுத்துவது கடினம். எனவே, அறிவிப்பு வெளியிடும்போது கால நீட்டிப்பும் செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனா் விவசாயிகள்.

பெட்டிச் செய்தியாக வெளியிடலாம்.

காரணம் என்ன?

பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் விவசாயிகளின் பங்களிப்பு விகிதம் 49:49:2 என இருந்தது. சில ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பு 25 சதவிகிதம் என மத்திய அரசு உச்ச வரம்பை நிா்ணயித்துள்ளது. இதன் அடிப்படையில் மத்திய அரசு 12.50 சதவிகிதம் கொடுக்கிறபோது, மாநில அரசு எஞ்சிய தொகையைப் பங்களிப்பு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

இதனால், நிகழாண்டு மாநில அரசு ஏறத்தாழ ரூ. 2,000 கோடி பங்களிப்பு செய்ய வேண்டும் என காப்பீட்டு நிறுவனங்கள் வலியுறுத்துவதால், இதுதொடா்பான ஒப்பந்தம் இழுபறியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. என்றாலும், ஒரு வாரத்துக்குள் அறிவிப்பு வெளி வரும் என வேளாண் துறையினா் நம்பிக்கையுடன் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com