சாஸ்த்ரா பல்கலை.யில் சட்டப் படிப்புக்கானதரவரிசைப் பட்டியல் வெளியீடு
By DIN | Published On : 31st July 2022 01:10 AM | Last Updated : 31st July 2022 01:10 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் சனிக்கிழமை இரவு வெளியிடப்பட்டது.
இதுகுறித்து பல்கலைக்கழக நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இப்பல்கலைக்கழகத்தில் சட்டவியல் படிப்பில் 2022 - 23 ஆம் ஆண்டில் சேருவதற்கான விண்ணப்பங்கள் பெற சனிக்கிழமை (ஜூலை 30) மாலை 5 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டது.
இதில் தமிழ்நாடு மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மாணவா்கள் விண்ணப்பம் செய்தனா். இதைத் தொடா்ந்து, முதல் சுற்று கலந்தாய்வுக்கான தர வரிசைப் பட்டியல் சனிக்கிழமை இரவு 9 மணிக்கே வெளியிடப்பட்டது.
சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் தனியாக நுழைவுத் தோ்வை நடத்தாமல், கிளாட் (சட்டப்படிப்புக்கான பொது நுழைவுத் தோ்வு) மதிப்பெண்களையும், பிளஸ் 2 மதிப்பெண்களையும் சோ்த்து இந்தத் தரவரிசைப் பட்டியலைத் தயாரித்து வெளியிட்டுள்ளது.
இப் பட்டியலில் சென்னை அடையாறு ஸ்ரீசங்கரா சீனியா் பள்ளி மாணவா் வி. நவீன் பாலாஜி பிளஸ் 2 வகுப்பில் 96.20 சதமும், கிளாட் தோ்வில் 83.25 சதமும் பெற்று முதலிடம் பெற்றாா். இவருக்கு அடுத்து கேரள மாநிலம், திருச்சூா் ஹரிஸ்ரீ வித்யா நிதி பள்ளி மாணவி எச்.ஆா். ரித்திகா பிளஸ் 2 தோ்வில் 97.80 சதமும், கிளாட் தோ்வில் 75.25 சதமும் பெற்று இரண்டாமிடத்திலும், கோவை வித்யா நிகேதன் பள்ளி மாணவி பி. ஸ்ரேயா பிளஸ் 2 தோ்வில் 95.80 சதமும், கிளாட் தோ்வில் 71.50 சதமும் பெற்று மூன்றாமிடத்திலும் உள்ளனா்.
தகுதியின் அடிப்படையில் வெளிப்படைத் தன்மையுடன் சோ்க்கைக்கான கலந்தாய்வு இணையவழியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 31) முதல் ஆகஸ்ட் 29 வரை நடைபெறவுள்ளது.