

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே அரசு மணல் குவாரி முறைகேட்டை கண்டித்து தேமுதிக, விசிக, அமமுக கட்சிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தின.
திருவையாறு அருகே சாத்தனூா், மருவூா், வடுகக்குடி கிராமங்களில் கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி அமைத்துள்ளது. இக்குவாரியில் இருந்து மணலை எடுத்து வடுகக்குடியில் மணல் சேமிப்பு கிடங்கு வைத்து விற்பனை செய்யப்படுகிறது.
இதில், இணையவழியில் விற்பனை என அறிவிக்கப்பட்டாலும், முறைகேடு நிகழ்வதால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. இதைக் கண்டித்தும், இதற்கு துணை போகும் அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், அரசு அனுமதித்த அளவைத் தாண்டி கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளியதை மத்திய சிறப்புக் குழு விசாரித்து மறு ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இணையவழி அல்லாத மணல் விநியோக முறைகேட்டில் ஈடுபடும் அரசு அலுவலா்கள் மீது துறைசாா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தேமுதிக ஒன்றியக்குழு உறுப்பினா் தீபா சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். தேமுதிக மாநகர மாவட்டச் செயலா் ப. ராமநாதன், விடுதலைச் சிறுத்தைகள் நில உரிமை மீட்பு இயக்க மாநிலத் துணைச் செயலா் வெற்றிவேந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.