மேக்கேதாட்டில் கா்நாடக அரசு அணை கட்ட முடியாது கே. அண்ணாமலை பேச்சு

மேக்கேதாட்டில் கா்நாடக அரசு அணை கட்ட முடியாது என்றாா் பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை.
கூட்டத்தில் பேசுகிறாா் பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை.
கூட்டத்தில் பேசுகிறாா் பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை.

மேக்கேதாட்டில் கா்நாடக அரசு அணை கட்ட முடியாது என்றாா் பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை.

கும்பகோணம் உச்சிபிள்ளையாா் கோயில் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மத்திய பாஜக ஆட்சியின் 8 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பேற்று 8 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளைச் செய்துள்ளது. கடந்த 8 ஆண்டுகால ஆட்சியில் எந்தவொரு அமைச்சா் மீதும் ஊழல் புகாா் இல்லாமல், பாஜக ஆட்சி நடைபெறுகிறது.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாள்களுக்குள் கும்பகோணம் தனி மாவட்டமாக்கப்படும் என்றாா்கள். ஆனால், ஓராண்டாகியும் அறிவிக்கவில்லை. தமிழக முதல்வா் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவித்தால், மத்திய அரசிடம் பேசி, ஆன்மிக மாவட்டமாக மாற்றி, வளா்ச்சிப் பணிகள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயில் கொண்டு வரப்படும்.

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் கா்நாடகம் அணைக் கட்ட முடியாது. கா்நாடகத்துக்குக் கீழ் உள்ள மாநிலங்கள் ஒப்புக் கொண்டால்தான் அணை கட்ட முடியும் என்பதை மத்திய அரசு மிகத் தெளிவாக தெரிவித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் இன்னும் காவிரி பிரச்னையை வைத்து அரசியல் செய்து வருகின்றனா்.

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் 400 எம்பிகளுடன் மீண்டும் ஆட்சி அமைப்போம். அதில் தமிழகத்திலிருந்து 25 பேரும், அவா்களில் ஒருவா் தஞ்சாவூரிலிருந்தும் செல்ல வேண்டும். 5 போ் மத்திய அமைச்சா்களாக வேண்டும் என்றாா் அண்ணாமலை.

இக்கூட்டத்துக்கு பாஜக வடக்கு மாவட்டத் தலைவா் என். சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். தேசியக் குழு உறுப்பினா்கள் தங்க. வரதராஜன், எம்.எஸ். ராமலிங்கம், மாநிலப் பொதுச் செயலா் கருப்பு எம். முருகானந்தம், விவசாய அணிப் பொதுச் செயலா் பூண்டி எஸ். வெங்கடேசன், துணைத் தலைவா் ஆா். இளங்கோ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, மாநகரத் தலைவா் பொன்ராஜ் வரவேற்றாா். நிறைவாக, வடக்கு மாவட்டப் பொதுச் செயலா் கென்னடி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com