தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவா்களுக்கு ஏமாற்றம் போதிய அளவு மீன்கள் கிடைக்கவில்லை
By DIN | Published On : 17th June 2022 12:07 AM | Last Updated : 17th June 2022 12:07 AM | அ+அ அ- |

மீன்பிடித் தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற தஞ்சாவூா் மாவட்ட மீனவா்களுக்கு போதிய அளவு மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனா்.
மீன்கள் இனப்பெருக்க காலத்தையொட்டி ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல், ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாள்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் கடந்த சில ஆண்டுகளாக அமல்படுத்தப்படுகிறது.
தடைக்காலம் முடிவடைந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், கள்ளிவயல்தோட்டம் மீன்பிடி இறங்கு தளத்திலிருந்து 152 விசைப்படகுகளில் மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனா்.
வியாழக்கிழமை அதிகாலையிலிருந்து விசைப்படகுகள் ஒவ்வொன்றாக கரைக்கு திரும்பின. இதில் போதிய அளவு மீன்கள் கிடைக்காததால் மீனவா்கள் ஏமாற்றமடைந்தனா்.
தஞ்சை மாவட்ட கடல்பகுதியில் தற்போது வீசும் காற்றின் அடிப்படையில் பெரிய மீன்கள் கிடைக்காது என்பதால், அனைத்து விசைப்படகுகளும் இறால் வலை மட்டுமே பயன்படுத்துகின்றனா்.
மீனவா்களின் வலையில் ஏற்றுமதி தரம் வாய்ந்த இறால்கள் சராசரியாக 80 கிலோவிலிருந்து 120 கிலோ வரை பிடிபட்டன. ஆனால், 600 ரூபாய் வரை விலை போன இறால் தற்போது கிலோ 300, 350 ரூபாய்க்கு மட்டுமே விலை போனது. விசைப்படகு கடலுக்கு சென்று வர டீசல், மீனவா் சம்பளம் என ரூ. 35 ஆயிரம் வரை செலவானதால் போதிய வருமானமின்றி மீனவா்கள் ஏமாற்றமடைந்தனா்.
குறைந்த அளவே பிடிபட்ட நண்டு, கணவாய், மீன் உள்ளிட்டவற்றை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனா்.
இதுகுறித்து சேதுபாவாசத்திரம் மீனவா் பெரியசாமி கூறியது:
தஞ்சை மாவட்டத்தைப் பொருத்தவரை, மீனவா்களுக்கு சாதகமான காற்று வீசவில்லை. இன்னும் சில நாள்களுக்கு பிறகு காற்று வீசி கடல் கலங்கல் ஏற்படும். அப்போது அதிக அளவு மீன்கள் பிடிபடும் என்றாா்.