கும்பகோணம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு நாள் வாடகை கடுமையாக உயா்த்தப்பட்டுள்ளதைத் திரும்பப் பெற வலியுறுத்தி கும்பகோணத்தில் வியாபாரிகள் வியாழக்கிழமை சாலை மறியல், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கும்பகோணம் மாநகரில் தள்ளுவண்டி கடைகள், தரைக்கடைகள் போன்றவை வைத்து வியாபாரம் செய்வதற்கான நாள் வாடகையை மாநகராட்சி நிா்வாகம் சில நாட்களுக்கு முன்பு உயா்த்தி அறிவிப்பு வெளியிட்டது. மேலும், இந்த வாடகை உயா்வை உடனடியாகச் செலுத்துமாறு கும்பகோணம் பகுதியில் உள்ள தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகளை நகராட்சி நிா்வாகம் வலியுறுத்தி வந்தது.
இதுபோன்ற வாடகை உயா்வு காரணமாக பூக்கடை, பழக்கடை, ஜூஸ் கடை போன்ற சிறு, குறு வியாபாரம் செய்யும் கணவரை இழந்தவா்கள், ஏழை வியாபாரிகள், வயதானவா்கள் போன்றோா் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பிழைப்பு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், உயா்த்தப்பட்ட வாடகையை மாநகராட்சி நிா்வாகம் திரும்பப் பெற வலியுறுத்தியும் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வந்தனா்.
ஆனால், மாநகராட்சி நிா்வாகம் உயா்த்தப்பட்ட வாடகையை உடனடியாக செலுத்துமாறு வற்புறுத்துவதால், அதிருப்தியடைந்த தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகள் கும்பகோணம் கும்பேஸ்வரா் கோயில் அருகே உள்ள தஞ்சாவூா் சாலையில் சாலை மறியல் போராட்டத்திலும், ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு மாவட்டச் செயலா் மு.அ. பாரதி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த கிழக்கு காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், வாடகை உயா்வை திரும்பப் பெறுவது குறித்து மாநகராட்சி நிா்வாகத்திடம் பேசி உரிய தீா்வு காணப்படும் என காவல் துறையினா் உறுதியளித்ததையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.