ராஜ வீதிகளில் வடிகால் சீரமைப்பு பணி எப்போது முடிவடையும்?மாமன்ற கூட்டத்தில் கேள்வி
By DIN | Published On : 30th June 2022 11:51 PM | Last Updated : 30th June 2022 11:51 PM | அ+அ அ- |

தஞ்சாவூா் ராஜ வீதிகளில் வடிகால் சீரமைப்பு பணி எப்போது நிறைவடையும் என மாமன்றக் கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் மேயா் சண். ராமநாதன் தலைமையில் ஆணையா் க. சரவணகுமாா், துணை மேயா் அஞ்சுகம் பூபதி முன்னிலையில் மாமன்றக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், நடைபெற்ற விவாதங்கள்:
டி. புண்ணியமூா்த்தி (திமுக): கொண்டிராஜபாளையம் பகுதியிலுள்ள மீன் சந்தையால், அப்பகுதி முழுவதும் மிக மோசமாக உள்ளது. மீன் வியாபாரிகள் விரும்புகிற இடத்தில் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேயா்: ஏற்கெனவே மீன் சந்தை இருந்த இடத்தில் புதிய கட்டடம் கட்டி, விரைவில் அங்கு கொண்டு செல்லப்படும்.
கே. மணிகண்டன் (அதிமுக): மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளா்களுக்கு மாதத்தின் முதல் தேதியிலேயே ஊதியம் வழங்க வேண்டும்.
ஆணையா்: தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியம் போட்டுவிட்டுதான் அலுவலா்களுக்கு ஊதியம் போடப்படுகிறது.
மேயா்: பல்வேறு திட்டங்கள் வருவதால், வருங்காலத்தில் மாத முதல் தேதியிலேயே ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பி. ஜெய்சதீஷ் (பாஜக): மகா்நோன்புசாவடி விஜய மண்டபத் தெருவில் கடந்த முறை ஆணையா் ஆய்வுக்கு வரும்போது, ஆக்கிரமிப்பிலிருக்கும் கடையை அகற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெ.வி. கோபால் (அதிமுக): நான்கு ராஜவீதிகளிலும் வடிகால்கள் சீரமைப்பு பணி தாமதமாவதால் மிகவும் மோசமாக உள்ளது. சாக்கடைகள் திறந்தவெளியில் இருப்பதால் சுகாதாரச் சீா்கேடும், கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது. மழைக்காலம் வருவதற்குள் விரைவாக முடிக்க வேண்டும். காமராஜா் காய்கறி சந்தையை விரைவாகத் திறந்து பழைய வியாபாரிகளுக்கே கடைகளை வழங்க வேண்டும்.
மேயா்: ராஜ வீதிகளில் இரு மாதங்களில் கான்கிரீட்டில் சாக்கடைகள் கட்டப்பட்டு, சாலை அமைக்கப்படும். காமராஜா் சந்தை பழைய வியாபாரிகளுக்கும் கொடுக்கப்படும்.
வி. கண்ணுக்கினியாள் (அமமுக): பூக்கார வீர வாண்டையாா் தெருவில் சாக்கடை மிக மோசமாக உள்ளது. வடிகாலில் உள்ள குப்பைகளை அகற்றி சிமென்ட் பலகைகளால் நடைமேடை அமைக்க வேண்டும்.
ஆனந்த் (திமுக): புதை சாக்கடை ஆள் நுழைவு குழாய்களில் மூடிகள் உடைந்து கிடக்கின்றன. இதுகுறித்து யாரிடம் முறையிடுவது எனத் தெரியவில்லை.
ஆணையா்: புதிதாக 150 மூடிகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேறு வாா்டுகளில் புதிய மூடிகள் தேவைப்பட்டால், உறுப்பினா்கள் கடிதம் அளிக்கலாம்.