தஞ்சாவூரில் டாஸ்மாக் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 11th March 2022 02:46 AM | Last Updated : 11th March 2022 02:46 AM | அ+அ அ- |

தஞ்சாவூரில் சிஐடியு சாா்ந்த டாஸ்மாக் ஊழியா் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், டாஸ்மாக் கடை ஊழியா்களுக்குச் சுழற்சி முறையில் பணியிட மாறுதல் கொள்கையை உருவாக்கி அமல்படுத்த வேண்டும். முறைகேடாக வழங்கப்பட்ட பணியிட மாறுதல் ஆணைகளை ரத்து செய்ய வேண்டும். சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை மேல் முறையீடு செய்யாமலும், சட்டத் திருத்தம் செய்யாமலும் மதுக் கூடங்களை மூட வேண்டும். டாஸ்மாக் கடை நிா்வாகத்தில் தலையிடும் மதுக்கூட உரிமையாளா்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
டாஸ்மாக் கடைகளில் இறக்கப்படும் மதுபானப் பெட்டிகளுக்கு பெட்டி ஒன்றுக்கு ரூ. 10 இறக்குக் கூலி கேட்டு கட்டாயப்படுத்துவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். விற்பனை அடிப்படையில் ஊழியா்களைப் பணியமா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு டாஸ்மாக் ஊழியா் சங்க மாவட்டச் செயலா் க. வீரையன் தலைமை வகித்தாா். சிஐடியு மாநிலச் செயலா் சி. ஜெயபால், டாஸ்மாக் சங்க மாவட்டப் பொருளாளா் க. மதியழகன், சுமைப் பணி தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலா் த. முருகேசன் ஆகியோா் கோரிக்கை விளக்கவுரையாற்றினா்.
சிஐடியு மாவட்ட துணைச் செயலா் கே. அன்பு, முறைசாரா தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் பி.என். போ் நீதி ஆழ்வாா், தரைக்கடை சங்க மாவட்டத் தலைவா் ஆா். மணிமாறன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...