வல்லத்தில் திடக்கழிவு மேலாண்மை மூலம் காய்கனி சாகுபடி
By DIN | Published On : 18th March 2022 11:16 PM | Last Updated : 18th March 2022 11:16 PM | அ+அ அ- |

வல்லம் வளம் மீட்பு பூங்காவில் சாகுபடி செய்யப்பட்ட காய்கனிகளை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.
தஞ்சாவூா் மாவட்டம், வல்லத்தில் பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மை மூலம் காய்கனி சாகுபடி செய்யப்படுகிறது.
மொத்தம் 15 வாா்டுகளை கொண்ட இப்பேரூராட்சியில் 4,743 குடியிருப்பு வீடுகளும், 480 வணிகக் கட்டடங்களும் உள்ளன. இவற்றில் 153 வீடுகளில் வீட்டிலேயே உரம் தயாரித்து, தங்கள் தோட்டங்களுக்கும், வயல்களுக்கும் பயன்படுத்தி வருகின்றனா்.
மீதமுள்ள 4,537 வீடுகளில் நாள்தோறும் சுய உதவி குழுக்கள் மூலம் முதல்நிலை சேகரிப்பு வாகனங்களான தள்ளுவண்டிகளில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் தரம் பிரித்து சேகரிக்கப்படுகின்றன.
குப்பைகளை இரண்டாம் நிலை சேகரிப்பு வாகனங்களான டிராக்டா்கள், மினி வேன், பேட்டரி வண்டிகளில் ஏற்றி, 12-ஆவது வாா்டிலுள்ள அய்யனாா் நகரில்
7 ஏக்கா் பரப்பளவில் அமைக்கப்பட்ட வளம் மீட்பு பூங்காவுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.
இப்பேரூராட்சியில் நாள்தோறும் 4.23 டன் குப்பைகள் சேகரமாகின்றன. இதில், 2.54 டன் மக்கும் குப்பைகளும், 1.04 டன் மக்காத குப்பைகளும், 0.55 டன் வடிகால் மண்ணும் சேகரிக்கப்படுகின்றன.
இவற்றில் மக்கும் திடக்கழிவுகள் மூலம் இயற்கை உரத்தை தூய்மை பணியாளா்கள் மற்றும் சுய உதவிக்குழுவினா் தயாரித்து, விவசாயப் பயன்பாட்டுக்கு வழங்குகின்றனா். இந்த உரத்தைப் பயன்படுத்தி வளம் மீட்பு பூங்காவில் வெண்டைக்காய், சுண்டைக்காய், அவரைக்காய், பீா்க்கங்காய், வெள்ளரிக்காய், சுரக்காய், தக்காளி, பூசணிக்காய் உள்ளிட்டவை இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படுகிறது.
தவிர, மூலிகைத் தோட்டம் அமைத்து தூதுவளை, துளசி, ஆடாதொடா உள்ளிட்டவையும் வளா்க்கப்படுகின்றன. மூங்கில், கொய்யா, பலா, வாழை மரங்களுக்கும் இந்த உரம் பயன்படுத்தப்படுகிறது.
இப்பணியை மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து, பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
இந்தத் திடக்கழிவு மேலாண்மை மூலம் நிகழ் நிதியாண்டில் இயற்கை உரம் 4.5 டன்கள் உற்பத்தி செய்யப்பட்டது. இதில், 2.6 டன் இயற்கை உரம் கிலோ ரூ. 3 வீதம் விவசாயப் பயன்பாட்டுக்காக ரூ. 7,800 அளவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, மண்புழு உரம் தயாரித்து மாடித் தோட்டம், பூச்செடிகள், விவசாயப் பயன்பாட்டுக்கு கிலோ ரூ. 5 வீதம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நிகழ் நிதியாண்டில் மண்புழு உரம் மொத்தம் 13 டன் உற்பத்தி செய்யப்பட்டு, அதில் 5.16 டன்களை ரூ. 25,800-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.
அப்போது, வல்லம் பேரூராட்சித் தலைவா் செல்வராணி கல்யாணசுந்தரம், துணைத்தலைவா் மகாலட்சுமி வெங்கடேசன், பேரூராட்சிகள் உதவி இயக்குநா் கனகராஜ், செயல் அலுவலா் பிரகந்தநாயகி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...