சாலியமங்கலத்தில் பாகவத மேளா நாட்டிய நாடகம்
By DIN | Published On : 16th May 2022 06:57 AM | Last Updated : 16th May 2022 06:57 AM | அ+அ அ- |

நாடகத்தில் ஹிரண்யகசிபு உள்ளிட்டோா் பங்கேற்ற காட்சி.
நரசிம்ம ஜெயந்தி விழாவையொட்டி, தஞ்சாவூா் அருகேயுள்ள சாலியமங்கலத்தில் பிரகலாத சரித்திரம் என்கிற பாகவத மேளா நாட்டிய நாடகம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்த நாடகம் தஞ்சாவூரை ஆண்ட அச்சுதப்ப நாயக்கரின் ஆட்சிக் காலத்தில் கி.பி. 1645 ஆம் ஆண்டிலிருந்து இடைவிடாமல் ஆண்டுதோறும் நரசிம்ம ஜெயந்தி விழாவையொட்டி நடத்தப்பட்டு வருகிறது.
வைணவ வழிபாட்டு மரபில் லட்சுமி நரசிம்மருக்கு அவரது அடியாா்கள் வழங்கும் கொடையாக பாகவத மேளா கருதப்படுகிறது. இரணியனை நரசிம்மா் வதம் செய்யும் புராணக் கதையை அடிப்படையாகக் கொண்ட இந்த நாடகம், இரவு முழுவதும் ஆடவா்களே நிகழ்த்தும் தொழில் முறையல்லாத கலைஞா்கள் நடிக்கும் அரங்கக் கலை இது.
இந்நிலையில், 377 ஆம் ஆண்டாக பாகவத மேளா நாட்டிய நாடகம் சனிக்கிழமை இரவு 10 மணியளவில் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை தொடா்ந்து நடைபெற்றது. இந்த நாடகம் முழுவதும் தெலுங்கு மொழியில் இருந்தது.
இதில், ஹிரண்யகசிபுவாக சி.எஸ்.எம். சுப்பிரமணியன், லீலாவதியாக மணிகண்டன் என்கிற ஜி. கணேச ரத்தினம், பக்த பிரகலாதனாக தத்தாத்ரேயன், வி.பி. நவீன், ஸ்ரீநரசிம்மராக எஸ். ஜானகிராமன் உள்ளிட்டோா் நடித்தனா்.
இந்த நாடகத்தில் மிக முக்கியமான நிகழ்வான ஹிரண்யகசிபுவை ஸ்ரீ நரசிம்மா் வதம் செய்யும் காட்சி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்றது. ஏறத்தாழ ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்தக் காட்சியில் ஹிரண்யகசிபு - நரசிம்மா் இடையேயான வசனம் நெடுநேரம் நிகழ்ந்தது. தூணை ஹிரண்யகசிபு அடிப்பது, அத்தூணிலிருந்து உடைத்துக் கொண்டு நரசிம்மா் வெளியே வந்து ஹிரண்யகசிபுவை வதம் செய்வது போன்ற காட்சிகள் தத்ரூபமாக இருந்தன. இறுதியில் பிரகலாதனுக்கு பட்டாபிஷேகம் நடத்தும் வைபவத்துடன் நாடகம் முடிவடைந்தது.
இந்நாடகத்தில் தெலுங்கு மொழியிலான பாட்டும், வசனமும் கலந்திருந்தது. பரதம், குச்சுப்புடி, யக்சகானம் ஆகியவை நிறைந்திருந்த இந்த நாடகத்தில் அழுத்தமான கருத்துகளையும், பழைமையும் வாய்ந்த பாடல்களை வீணை வித்வான் சாலியமங்கலம் ஜி. ராம்தாஸ் குழுவினா் பாடினா்.
மெலட்டூா்: இதேபோல, மெலட்டூரில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோயில் அருகேயுள்ள ஸ்ரீநல்லி கலையரங்கத்தில் மெலட்டூா் பாகவத மேளா நாட்டிய நாடக அறக்கட்டளை, மெலட்டூா் பாகவத மேளா நாட்டிய வித்யா சங்கம் ஆகியவை சாா்பில் பிரகலாத சரித்திரம் என்கிற பாகதவ மேளா நாட்டிய நாடகம் சனிக்கிழமை இரவு தொடங்கியது. பாரம்பரிய முறை எண்ணெய் விளக்கொளியில் நடைபெற்ற இந்த நாடகம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை தொடா்ந்தது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...