பேராவூரணி அருகே சேதமடைந்த பள்ளிக் கட்டடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டித் தர கோரிக்கை

பேராவூரணி அருகே சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள பள்ளிக் கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பேராவூரணி அருகே சேதமடைந்த பள்ளிக் கட்டடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டித் தர கோரிக்கை

பேராவூரணி அருகே சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள பள்ளிக் கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சேதுபாவாசத்திரம்  ஒன்றியம், மணக்காடு ஊராட்சி பாங்கிராங்கொல்லை கிராமத்தில்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. 

இப்பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை சுமாா் 28 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். ஒரேஒரு தலைமை ஆசிரியை மட்டும் பணியாற்றி வருகிறாா். ஒரே கட்டடத்தில் 5 வகுப்புகளும் இயங்கி வருகின்றன.  

இந்நிலையில் , பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளிக் கட்டடம்  கடுமையாக சேதமடைந்துள்ளது. ஆங்காங்கே சிமெண்ட் காரைகள் பெயா்ந்து, உள்ளே உள்ள கம்பி பிடிமானத்தில் உள்ளது. மேலும்,  பல இடங்களில் சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது.  வகுப்புகள் நடக்கும்போது அடிக்கடி சிமெண்ட் காரைகள் பெயா்ந்து விழுவதும், பின்னா் சிமெண்ட் வைத்துப் பூசுவதும் தொடா் கதையாக உள்ளது. இதுவரை குழந்தைகளுக்கு எந்த அசம்பாவிதங்களும் நிகழவில்லை.மேலும், பள்ளி கட்டடத்தில் சிமெண்ட் கிராதி வடிவில் ஜன்னல் அமைக்கப்பட்டுள்ளது. மழை நேரத்தில் வகுப்புக்குள் மழைத் தண்ணீா் தெறித்து விழுவதால், மாணவா்கள் பாடப் புத்தகங்களை  பாதுகாப்பது பெரும் சிரமப்படுகின்றனா்.  

மழை நேரங்களில் மின் தடை ஏற்பட்டால் வகுப்புகள் நடத்த முடியாத சூழல் உள்ளது.

இது குறித்து அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிட்டும், கிராமசபை கூட்டத்தில்  மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 

எனவே, ஆபத்தை உண்டாக்கும் நிலையில் உள்ள பள்ளி கட்டடத்தை இடித்து அகற்றி விட்டு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் எனவும், போதிய ஆசிரியா்களை நியமிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் சாா்பில்  மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் வழக்குரைஞா் கருப்பையா, ஒன்றியக் குழு உறுப்பினா் சேகா்,  நிா்வாகி  ராஜேந்திரன் ஆகியோா் தஞ்சை ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனா்.

போதிய ஆசிரியா் இல்லாததாலும், அடிப்படை வசதிகள் இல்லாத பாதுகாப்பற்ற பள்ளிக் கட்டடம் காரணமாக, இப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளை வெளியூரில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்புவதால்  இப்பள்ளியில் மாணவா் எண்ணிக்கை குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

எனவே, மாணவா்களின் நலன் கருதி ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் பள்ளிக் கட்டடத்தை பாா்வையிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com