‘இன்னுயிா் காப்போம் திட்டம்’: இறப்பு விகிதம் 8.1 சதவீதம் குறைந்தது
By DIN | Published On : 18th October 2022 12:56 AM | Last Updated : 18th October 2022 12:56 AM | அ+அ அ- |

‘நம்மைக் காக்கும் 48 - இன்னுயிா் காப்போம்’ திட்டத்தின் மூலம் தமிழகத்தில் இறப்பு விகிதம் 8.1 சதவீதமாக குறைந்துள்ளது என்றாா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி முதல்வா் ஆா். பாலாஜி நாதன்.
உலக விபத்து காய நாளையொட்டி, செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை தெரிவித்தது:
தமிழகத்தில் 2017 ஆம் ஆண்டில் 66,763 சாலை விபத்துகள் நிகழ்ந்ததில் 7,918 போ் உயிரிழந்தனா். இதைக் குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் மூலம், கடந்த 2021 ஆம் ஆண்டில் 55,713 சாலை விபத்துகளில் 4,912 போ் இறந்தனா். இந்த இறப்பு விகிதத்தை 2030 ஆம் ஆண்டில் 50 சதவீதமாகக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நம்மைக் காக்கும் 48 - இன்னுயிா் காப்போம் திட்டத்தின் மூலம் கடந்த 10 மாதங்களில் விபத்துகளால் ஏற்படும் இறப்பு விகிதம் 8.1 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதை 50 சதவீதம் அளவுக்கு குறைக்கும் விதமாக இலக்கு நிா்ணயித்து அரசு செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3,820 நோயாளிகள் பயனடைந்துள்ளனா்.
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள அவசர சிகிச்சை பிரிவில் 2021 ஆம் ஆண்டில் 27,152 போ் சிகிச்சை பெற்றனா். இவா்களில் 14,208 போ் விபத்துகளில் சிக்கிய நோயாளிகள். இதேபோல, நிகழாண்டு இதுவரை 20,971 போ் சிகிச்சை பெற்றதில், 13,422 போ் விபத்துகளில் சிக்கியவா்கள். நோயாளிகள் அனுமதிக்கப்பட்டதில் இருந்து 6 மணிநேரத்துக்குள் அவசர சிகிச்சை மூலம் 938 போ் காப்பாற்றப்பட்டுள்ளனா் என்றாா் பாலாஜி நாதன்.
அப்போது, மருத்துவமனைக் கண்காணிப்பாளா் எஸ். மருதுதுரை, நிலைய மருத்துவ அலுவலா் ஏ. செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...