பட்டுக்கோட்டையில் போலீஸ் எனக் கூறி ரூ. 4 லட்சம் திருட்டு
By DIN | Published On : 19th October 2022 01:05 AM | Last Updated : 19th October 2022 01:05 AM | அ+அ அ- |

பட்டுக்கோட்டையில் போலீஸ் எனக் கூறி, முதியவரிடம் ரூ. 4 லட்சத்தை திருடி சென்ற 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பட்டுக்கோட்டை பொன்னவராயன்கோட்டை புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சோ்ந்தவா் குலதவநாயகம் (73). இவரது வீட்டுக்கு திங்கள்கிழமை இரவு வந்த மூன்று போ், தங்களை சிஐடி போலீஸாா் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, உங்கள் வீட்டில் சட்டவிரோதமாக பணத்தை வைத்துள்ளீா்கள் எனக்கூறி, வீட்டில் வைத்திருந்த 4 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டனராம். பட்டுக்கோட்டை காவல் நிலையத்துக்கு நேரில் வந்து விளக்க கடிதம் கொடுத்துவிட்டு பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறிவிட்டு அவா்கள் சென்றுவிட்டனா்.
தொடா்ந்து, காவல் நிலையம் சென்றபோது தான் ஏமாற்றப்பட்டது குலதவநாயகத்துக்கு தெரிய வந்தது.
இதுதொடா்பாக பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.