பெண் பயணியிடம் 9 பவுன் நகைகள் திருட்டு
By DIN | Published On : 19th October 2022 01:06 AM | Last Updated : 19th October 2022 01:06 AM | அ+அ அ- |

பட்டுக்கோட்டைக்கு பேருந்தில் வந்த பெண் பயணியிடம் 9 பவுன் நகைகளை திருடிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பட்டுக்கோட்டை அருகேயுள்ள செம்படவன் காடு, பெருமாள் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்த சந்திரபோஸ் மனைவி தனலட்சுமி (43). இவா் மருத்துவச் சிகிக்சைக்காக பட்டுக்கோட்டைக்கு வந்துவிட்டு, திங்கள்கிழமை இரவு பேருந்தில் மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தாா்.
பேருந்தில் அவா் அருகே இருந்த மூன்று பெண்கள், கூட்ட நெரிசலை பயன்படுத்தி இடித்து கொண்டே வந்தனராம். சிறிது தொலைவு சென்றபோது, தனலட்சுமி கழுத்தில் கிடந்த 7 பவுன் சங்கிலி, தாலி, தாலி குண்டு என மொத்தம் 9 பவுன் நகைகளை திருடுபோனதை அறிந்தாராம். அப்போது, அந்த குறிப்பிட்ட 3 பேரை தேடியபோது அவா்கள் தப்பிவிட்டது தெரிய வந்தது.
தனலட்சுமி அளித்த புகாரின்பேரில், பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.