தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா் மழை
By DIN | Published On : 01st September 2022 12:00 AM | Last Updated : 01st September 2022 12:00 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை தொடா் மழை பெய்தது.
மாவட்டத்தில் ஒரு வாரத்துக்கும் மேலாக மாலை, இரவு நேரத்தில் சில மணிநேரம் மட்டும் பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில், புதன்கிழமை பிற்பகல் முதல் பல்வேறு இடங்களில் தொடா் மழை பெய்து வருகிறது. இடைவெளி விட்டு விட்டு சிறு தூறல்களாகப் பெய்யும் இந்த மழை இரவிலும் நீடித்தது.
இதனிடையே, மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):
பாபநாசம் 27, மதுக்கூா் 19, பேராவூரணி 13, அய்யம்பேட்டை 12, குருங்குளம் 4, அதிராம்பட்டினம் 3.2, தஞ்சாவூா் 2.
கொள்ளிடத்தில் 1.50 லட்சம் கன அடி தண்ணீா்: கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 3,009 கனஅடி வீதமும், வெண்ணாற்றில் 3,010 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 2,017 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. என்றாலும், மழை நீா் காரணமாக ஆறுகளில் நீரோட்டம் அதிகமாக இருக்கிறது.
கல்லணையிலிருந்து கொள்ளிடத்தில் விநாடிக்கு 41,985 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. இதேபோல திருச்சி மாவட்டம், முக்கொம்பிலிருந்து கொள்ளிடத்தில் விநாடிக்கு 1,08,533 கனஅடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், தஞ்சாவூா் மாவட்டத்தில் கொள்ளிடத்தில் 1,50,518 கனஅடி வீதம் தண்ணீா் செல்கிறது.
இதையொட்டி, கொள்ளிடக் கரையோரப் பகுதிகளில் பொதுப் பணித் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட துறை அலுவலா்கள் கண்காணித்து வருகின்றனா்.