பள்ளி மாணவா்களுக்கான வரலாற்று உலா
By DIN | Published On : 01st September 2022 12:00 AM | Last Updated : 01st September 2022 12:00 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் பெரியகோயில், தாராசுரம் ஐராவதேஸ்வரா் கோயிலில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வரலாற்று உலா புதன்கிழமை நடைபெற்றது.
இதில், கோவையைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் 25 பேரும், ஆசிரியா்கள் 5 பேரும் கலந்து கொண்டனா். இந்த வரலாற்று உலாவை தஞ்சாவூா் தமிழ் சங்கத் தலைவா் கோ. தெய்வநாயகம் தொடக்கி வைத்து, தஞ்சாவூரின் பெருமையையும், கோயில் கட்டடக் கலையில் இராஜராஜன் புகுத்திய புதுமை பற்றியும், விமானத்தின் சிறப்பு பற்றியும் பேசினாா்.
பின்னா், கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்க நிறுவனா் மற்றும் செயலா் கும்பகோணம் ஆ. கோபிநாத் பெரியகோயிலை எடுப்பித்த ராஜராஜனின் மிக முக்கிய கல்வெட்டைப் படித்து காண்பித்தாா். இதையடுத்து, கும்பகோணம் அருகில் உள்ள சிற்பங்களின் சொா்க்கமான தாராசுரம் ஐராவதேஸ்வரா் கோயிலில் உள்ள, ஒரு அங்குலமுடைய சிற்பம் முதல் பல அடிகள் கொண்ட சிற்பங்கள் வரையிலும், ராஜ கம்பீர மண்டபத்தின் தூண்களில் காணப்படும் அனைத்து சிற்பங்கள் குறித்தும் விளக்கிக் கூறினாா்.
சுவாமிமலை சிற்பக் கலைக் கூடத்தில் உலோக சிலைகள் செய்யும் முறை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. நிறைவாக பல் மருத்துவா் சம்பத் நன்றி கூறினாா்.