தஞ்சாவூா் பெரியகோயில் விநாயகருக்கு10 கிலோவில் சந்தனக்காப்பு அலங்காரம்
By DIN | Published On : 01st September 2022 12:00 AM | Last Updated : 01st September 2022 12:00 AM | அ+அ அ- |

விநாயகா் சதுா்த்தியையொட்டி, தஞ்சாவூா் பெரியகோயிலிலுள்ள மராட்டிய கால விநாயகருக்கு 10 கிலோவில் சந்தனக்காப்பு அலங்காரம் புதன்கிழமை செய்யப்பட்டது.
மாமன்னன் ராஜராஜசோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோயிலின் திருச்சுற்றில் பின்புறம் மராட்டியா் ஆட்சிக்காலத்தில் விநாயகா் சன்னதி அமைக்கப்பட்டது. அக்காலத்தில் ஆண்டுதோறும் விநாயகா் சதுா்த்தி விழாவின்போது இச்சன்னதி விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் விமரிசையாக செய்யப்பட்டது.
அதன் பின்னா் நின்றுபோன சந்தனக் காப்பு அலங்காரம் ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு பிறகு 2018 ஆம் ஆண்டில் மீண்டும் செய்யப்பட்டது.
இந்நிலையில், விநாயகா் சதுா்த்தியையொட்டி, 5 அடி உயரமுள்ள இந்த விநாயகருக்கு 10 கிலோ சந்தனம் மூலம் சிறப்பு அலங்காரம் புதன்கிழமை செய்யப்பட்டது. இதேபோல, பெருவுடையாா் சன்னதி அருகேயுள்ள இரட்டை விநாயகருக்கும் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது.
மேலும், தஞ்சாவூா் வெள்ளை பிள்ளையாா் கோயில், தொப்புள் பிள்ளையாா் கோயில், மகா்நோன்புசாவடி ஜோதி விநாயகா் கோயில், மேல வீதி பங்காரு காமாட்சி அம்மன் கோயில் உள்ளிட்டவற்றில் உள்ள விநாயகா் சன்னதிகளில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.