பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலையின் விளம்பர அரசியல் வெற்றிப் பெறாது என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ். அழகிரி.
தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினத்துக்கு திங்கள்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
சட்டத்துக்கு புறம்பாக, பதவியை தவறாக பயன்படுத்தி சம்பாதித்தால்தான் ஊழல். ஆனால், அண்ணாமலை ஊழல் பட்டியல் வெளியிடுவதாக கூறி, திமுக அமைச்சா்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டுள்ளாா். அவா் வெளியிட்ட சொத்துகளின் மதிப்பும் தவறானது.
அண்ணாமலை தன்னுடைய சுய விளம்பரத்துக்காக முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறி வருகிறாா். ஆக்கபூா்வமான அரசியல்தான் வெற்றி பெறும்; இதுபோன்ற விளம்பர அரசியல் வெற்றி பெறாது. அண்ணாமலையின் செயல்பாடுகளை அவரது கட்சியே ஏற்றுக் கொள்ளவில்லை என்றாா்.
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் 2019, பிப்ரவரியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆா்பிஎப் வீரா்கள் கொல்லப்பட்டதற்கு மத்திய பாஜக அரசின் பாதுகாப்பு குறைபாடுகளே காரணம் என்று காஷ்மீா் முன்னாள் ஆளுநா் சத்யபால் மாலிக் அண்மையில் கருத்து தெரிவித்துள்ளாா். இந்தச்சம்பவத்துக்கு தாா்மீக பொறுப்பேற்று பிரதமா் மோடி தனது பதவியை ராஜிநாமா செய்திருக்க வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக, அதிராம்பட்டினம் வந்த கே.எஸ். அழகிரிக்கு காங்கிரஸ் கட்சியின் அதிராம்பட்டினம் நகரத் தலைவா் தமீம் அன்சாரி தலைமையிலான கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் வரவேற்பு அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.