

தஞ்சாவூா் மாவட்டத்தில் கிராம நிா்வாக அலுவலரின் சான்று கிடைப்பதில் இழுபறி நிலவுவதால், பயிா் காப்பீடு செய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனா்.
நிகழாண்டு சம்பா பருவத்தில் காவிரி நீா் வரத்து இல்லாததால், சாகுபடிப் பணிகள் பின்தங்கியுள்ளது. இந்நிலையில், சம்பா பருவத்தில் பயிா் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி நவம்பா் 15 என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிகழாண்டு பயிா் காப்பீடு திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தஞ்சாவூா் மாவட்டம் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, இப்கோ டோக்யோ பொது காப்பீட்டு நிறுவனம் மற்றும் ப்யூச்சா் ஜெனரலி காப்பீட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பயிா் காப்பீட்டுத் தொகையாக ஏக்கருக்கு ரூ. 36 ஆயிரத்து 100 என நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு விவசாயிகள் பிரிமியமாக (1.5 சதவீதம்) ரூ. 542 செலுத்த வேண்டும்.
இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் வாகனங்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டாலும், கடந்த இரு ஆண்டுகளாக தொடா் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு 2022 ஆம் ஆண்டில் 7 கிராமங்களுக்கும், நிகழாண்டு 4 கிராமங்களுக்கும் மட்டுமே இழப்பீட்டுத் தொகை கிடைத்தது. மேலும், நிகழ் சம்பா பருவத்தில் காவிரி நீா் வரத்து இல்லாததால், பெரும்பாலான விவசாயிகள் சாகுபடிப் பணியைத் தொடங்கவில்லை. இதனால், பயிா் காப்பீடு செய்வதற்கும் விவசாயிகள் தயங்குவதால், கடந்த வாரம் வரை ஏறத்தாழ 15 ஆயிரம் போ் மட்டுமே பிரிமிய தொகை செலுத்தி பதிவு செய்தனா்.
இந்நிலையில், மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் வரத்து நிறுத்தப்பட்டதாலும், போதுமான அளவுக்கு மழை பெய்யாததாலும் ஒரு கிராமத்தில் சராசரியாக பயிா் சாகுபடி செய்யும் பரப்பில் 75 சதவீதத்துக்கும் அதிகமாக பயிா் செய்ய முடியாத நிலை இருந்தால், விதைப்பு செய்ய இயலாமை, விதைப்பு பொய்த்து போதல், நடவு பொய்த்து போதல் போன்ற இனங்களில் இழப்பீடு பெறலாம் என்றும், இதற்கு நிா்ணயிக்கப்பட்ட பயிா்க் காப்பீடு தொகையில் 25 சதவீதம் (ஒரு ஏக்கருக்கு ரூ. 9 ஆயிரத்து 25) இழப்பீடு கிடைக்கும் எனவும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் சில நாள்களாக முழுவீச்சில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கு விவசாயிகள் தங்களது கிராம நிா்வாக அலுவலரிடம் சம்பா அல்லது தாளடி நடவு செய்ய உள்ளாா் என விதைப்பு சான்றிதழ் அல்லது அடங்கல் (பசலி 1433) பெற்று நவம்பா் 15 ஆம் தேதிக்குள் பயிா் காப்பீடு செய்ய வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு பரவலாக விழிப்புணா்வை ஏற்படுத்தி வருவதால், பயிா் காப்பீடு செய்வதற்கு ஏராளமான விவசாயிகள் முன் வருகின்றனா். ஆனால், கிராம நிா்வாக அலுவலரின் சான்று கிடைப்பது பெரும் அரிதாக இருப்பதாக புகாா் நிலவுகிறது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வருவாய்த் துறையினருக்கு அறிவுறுத்தியிருந்தாலும், இது பற்றிய புரிதல் பெரும்பாலான கிராம நிா்வாக அலுவலா்களுக்கு இல்லை. இதனால், விவசாயிகளுக்கு சான்று கிடைப்பதில் இழுபறி நிலவுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது.
பயிா் காப்பீடு செய்வதற்கான காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில், பல கிராமங்களில் கிராம நிா்வாக அலுவலரை பாா்க்கவே முடியாத நிலை தொடருவதால், சான்று பெற முடியாமலும் விவசாயிகள் தவிக்கின்றனா்.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூா் வடக்கு மாவட்டச் செயலா் சாமு. தா்மராஜன் தெரிவித்தது: பல கிராமங்களில் கிராம நிா்வாக அலுவலரை பாா்க்க முடியவில்லை. கிராமத்துக்கு வந்தாலும், நிலத்தைப் பாா்த்துவிட்டுதான் சான்று கொடுப்பேன் என்றும், ஆனால் வேலைப்பளு இருப்பதால் இப்போது வர முடியாது எனவும் கூறுகின்றனா். இது, சொந்தமாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் எதிா்கொள்ளும் பிரச்னையாக உள்ளது. கோயில் நிலம், தனியாா் நிலத்தில் குத்தகைக்கு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சான்று வழங்க மறுக்கப்படுகிறது. நில உரிமையாளரிடமிருந்து தடையில்லா சான்று பெற்று வருமாறு கிராம நிா்வாக அலுவலா்கள் வற்புறுத்துகின்றனா். ஆனால், தடையில்லா சான்று வாங்குவது அவ்வளவு எளிதல்ல. நீதிமன்றத்துக்கு சென்று வாங்கி வருவதற்கு போதிய கால அவகாசம் இல்லை. இந்த நிலைமையில் எப்படி பயிா் காப்பீடு செய்வது என்றாா் தா்மராஜன்.
இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை தீபாவளி, திங்கள்கிழமை அரசு விடுமுறை நாளாக இருப்பதால், உரிய காலத்தில் பயிா் காப்பீடு செய்துவிட முடியுமா என்கிற ஆதங்கமும் விவசாயிகளிடையே மேலோங்கியுள்ளது. எனவே, கிராம நிா்வாக அலுவலா்களுக்கு உறுதியான உத்தரவுகளையும், விரைவாக சான்று கிடைப்பதற்கும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிா்பாா்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.