பயிா்க் காப்பீடு செய்வதற்கான தேதியை நீட்டிக்கக் கோரிக்கை

பயிா் காப்பீடு செய்யும் தேதியை நீட்டிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
Updated on
1 min read


தஞ்சாவூா்: பயிா் காப்பீடு செய்யும் தேதியை நீட்டிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன் தெரிவித்தது:

காவிரி நீா் இல்லாத நிலையிலும் விவசாயிகள் துணிந்து சம்பா சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் பயிா்க் காப்பீடு செய்ய புதன்கிழமை (நவ.15) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 3 நாள்களாக விடுமுறையும், மேலும் இணையதள சா்வா் முடக்கமும் மிகப்பெரிய இடையூறாக இருப்பதால், காப்பீடு செய்வதில் தாமதம் நேரிட்டுள்ளது. இதனால், பயிா் காப்பீடு செய்வதற்காக இ - சேவை மையங்களில் விவசாயிகள் காத்திருக்கின்றனா். தண்ணீா் இல்லாததால், சாகுபடிப் பணிகள் தொடங்குவதும் தாமதமாகிவிட்டது.

எனவே, விவசாயிகளின் சிரமமான நிலையைக் கருத்தில் கொண்டு பயிா் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்.

இதேபோல, காவிரி உரிமை மீட்புக் குழுவைச் சோ்ந்த வெள்ளாம்பெரம்பூா் துரை. இரமேசு தெரிவித்தது: காவிரி நீா் திறப்பு நிறுத்தம், பின்பட்ட குறுவை சாகுபடி அறுவடை, தீபாவளி பண்டிகை விடுமுறை போன்றவற்றால் விவசாயிகள் சம்பாவுக்கான பயிா்க் காப்பீட்டை குறித்த நேரத்தில் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனா். பல இ - சேவை மையங்களில் இணையதளம் இயங்கவில்லை. சில மையங்களில் விவசாயிகளிடம் இருந்து காப்பீட்டுக்கான விண்ணப்பத்தை வாங்க மறுக்கின்றனா்.

எனவே, 40 சதவீத விவசாயிகள் மட்டுமே காப்பீடு செய்துள்ளனா். விவசாயிகளின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு காப்பீடு செய்வதற்கான தேதியை நவம்பா் 30 வரை நீட்டிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com