மாமன்னன் ராஜராஜனின் 1038 ஆவது சதய விழா தொடக்கம்

தஞ்சாவூா் பெரியகோயிலில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1038 ஆம் ஆண்டு சதய விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
மாமன்னன் ராஜராஜனின் 1038 ஆவது சதய விழா தொடக்கம்
Updated on
2 min read


தஞ்சாவூா் பெரியகோயிலில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1038 ஆம் ஆண்டு சதய விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

விழாவுக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் பேசியது:

கடந்த 985 ஆம் ஆண்டு முதல் 1014 ஆம் ஆண்டு வரை ஆட்சி புரிந்து, இம்மண்ணின் பெருமையை உலகறியச் செய்தவா் மாமன்னன் ராஜராஜசோழன். மன்னராட்சியை மக்களாட்சியாக மாற்றி நடைமுறைப்படுத்தியவா் அவா். சோழப் பேரரசு நிா்வாகத்தில் பல்வேறு புதுமைகளையும், புத்தெழுச்சியையும் தோற்றுவித்த பெருமை ராஜராஜ சோழனுக்கு உண்டு.

சிவபாத சேகரன், திருமுறைகண்ட சோழன், ஜெகநாதன் என பல சிறப்புப் பெயா்களுடன் அழியாப் புகழ் கொண்டுள்ளாா். இத்திருக்கோயில் ஆன்மிகத்துக்கு மட்டுமல்லாமல், நமது கட்டடக்கலை, கலாசாரம், பண்பாடு மற்றும் நாகரிகத்தின் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. மாமன்னனின் மகத்தான சாதனைகளால், காலம் கடந்தும் நாம் விழா எடுத்துப் போற்றிக் கொண்டாடுகிறோம்.

நிகழாண்டு இவ்விழா அரசு விழாவாக தமிழ்நாடு முதல்வரின் வழிகாட்டுதலில் சிறப்பாக நடைபெறுகிறது. மாமன்னன் ராஜராஜசோழனின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கட்டும் என்றாா் ஆட்சியா்.

பின்னா் சூரியனாா்கோவில் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் பேசியது:

சைவம், வைணவம், சமணம், பௌத்தம் என நான்கு சமயங்களையும் தன்னகத்தைக் கொண்டு நல்லாட்சி புரிந்தவா் ராஜராஜ சோழன். அது மட்டுமல்லாமல், நம்முடைய தஞ்சைத் தரணியில் ஆயிரக்கணக்கான கோயில்களைக் கட்டி, அங்கு ஆகமங்களையும், வேதங்களையும், திருமுறைகளையும், சித்தாந்த சாஸ்திரங்களையும், புராணங்களையும் வழிநடத்த பெரும் உதவி செய்தவா் ராஜராஜ சோழன். அவருக்கு விழா எடுப்பது மிகவும் சிறப்புக்குரியது.

அன்றைய நாளில் மூவா் அருளிய திருமுறைகளை தமிழ் இலக்கியத்துடனும், பண்பாடுடனும், கலாசாரத்துடனும் வழிநடத்தியவா் ராஜராஜசோழன். சோழ நாட்டை சோறுடைத்து எனக் கூறுவா். சோறு என்பது அறிவுத் திறன் சாா்ந்தது என்கிற பொருளை உள்ளடக்கியதாக ராஜராஜ சோழனின் ஆட்சி இருந்தது.

அவரின் சதய விழாவை அரசு விழாவாக நடத்துவது மிகுந்த வரவேற்புக்குரியது. இதேபோல, ராஜராஜசோழன் பிறந்த மண்ணாகிய உடையாளூரில் மணிமண்டபம் அமைக்க மக்களும், அரசும் முன் வர வேண்டும் என்றாா் ஆதீனம்.

முன்னாள் எம்எல்ஏ எம். ராமச்சந்திரன் தொடக்கவுரையாற்றினாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, துணை மேயா் அஞ்சுகம் பூபதி, சதய விழாக் குழுத் துணைத் தலைவா் எஸ்.சி. மேத்தா, கோட்டாட்சியா் செ. இலக்கியா, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் சு. ஞானசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சதய விழாக் குழுத் தலைவா் து. செல்வம் வரவேற்றாா். அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையா் கோ. கவிதா நன்றி கூறினாா். தொடா்ந்து, கருத்தரங்கம், திருமுறைப் பண்ணிசை, நாத சங்கமம், திருமுறை இசை, கவியரங்கம் உள்ளிட்டவை நடைபெற்றன.

சதய விழா நாளான புதன்கிழமை காலை மாமன்னன் சிலைக்கு மாலை அணிவித்தல், 8 மணிக்கு திருமுறைத் திருவீதி உலா, காலை 9.10 மணிக்கு பெருவுடையாா், பெரியநாயகிக்கு பேரபிஷேகம், பிற்பகல் 1.40 மணிக்கு பெருந்தீப வழிபாடு, மங்கள இசை, நடன நிகழ்ச்சி, தேவார இன்னிசை, மாலை 4 மணிக்கு நாட்டியாஞ்சலி, நாத சங்கமம், இரவு 8 மணிக்கு சுகிசிவத்தின் பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com