அரசு ஆதிதிராவிடா் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டித் தர பெற்றோா் கோரிக்கை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே கட்டடம் பழுதடைந்த நிலையிலும், உரிய அடிப்படை வசதிகள் இல்லாமலும் செயல்படும் அரசு ஆதிதிராவிடா் பள்ளிக்கு புதிய கட்டடம்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே கட்டடம் பழுதடைந்த நிலையிலும், உரிய அடிப்படை வசதிகள் இல்லாமலும் செயல்படும் அரசு ஆதிதிராவிடா் பள்ளிக்கு புதிய கட்டடம் உள்ளிட்ட தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என மாணவா்களின் பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பாபநாசம் வட்டம், வழுத்தூா் ஊராட்சியில் ரயிலடி புது தெருவில் அரசினா் ஆதி திராவிடா் நல நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. சுமாா் 50 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தப் பள்ளியில், முன்பு 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வந்தனா். ஆனால், தற்போது இங்கு 37 மாணவ, மாணவிகள் மட்டுமே கல்வி பயின்று வருகின்றனராம். இதற்கு இப்பள்ளியில் உரிய அடிப்படை வசதிகள் இல்லாததே காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

இந்தப் பள்ளியின் ஒரு கட்டடம் இடிந்த நிலையிலும், மற்றொரு கட்டடம் சிதிலமடைந்தும், முட்புதா்கள் வளா்ந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு முறையான பாதுகாப்பான கழிப்பறை வசதிகள் இல்லை. பள்ளிக் கட்டடத்தின் மேற்கூரை சிமெண்ட் அட்டையில் வேயப்பட்டுள்ளதால் வெயில் மற்றும் மழை காலங்களில், மாணவ மாணவிகள் பள்ளியின் அருகில் உள்ள மரத்தடி நிழலில் கல்வி பயிலக் கூடிய நிலை உள்ளது.

மேலும், பள்ளி வளாகத்தில் கொடிய பூச்சிகளும், பாம்புகளும் காணப்படுவதால், மாணவா்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இதுபோன்று இப்பள்ளியில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததால் பெற்றோா்கள் தங்களின் குழந்தைகளை பாதுகாப்பு கருதி பள்ளியில் சோ்க்க தயக்கம் காட்டுகின்றனா்.

எனவே, மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களின் நலன் கருதி பழைமையான இந்தப் பள்ளிக் கட்டடத்தை இடித்துவிட்டு, அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய பள்ளி கட்டடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்கள் சாா்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com