தொழிலாளா் விரோத தொழிற்சாலை சட்ட திருத்தத்தை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற கோரி தஞ்சாவூா் அய்யாசாமி வாண்டையாா் நினைவு பழைய பேருந்து நிலையம் எதிரே ஏஐடியுசி அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொழிலாளா் மற்றும் தொழிற்சங்கம் தொடா்பான 44 சட்டங்களை நான்கு சட்டத் தொகுப்புகளாக மத்திய அரசு காா்ப்பரேட் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக சுருக்கி உள்ளது.
தொழிற்சாலை சட்டத் திருத்தத்தில் 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயா்த்துதல், ஊதியக் குறைப்பு, சமூக நலத் திட்டங்களைக் கை விடுதல், நிரந்தர பணியிடங்களில் ஒப்பந்த முறையைக் கொண்டு வருவது உள்ளிட்ட சட்டத் தொகுப்புக்கு அரசு, தொழிற்சங்கம், முதலாளிகள் கொண்ட முத்தரப்பு குழுக் கூட்டத்தை நடத்தி கருத்து கேட்காமல், சட்டப்பேரவைக் கூட்டத்தில் தொழிலாளா் தொழிற்சாலை சட்ட திருத்த (65ஏ) தொகுப்புகளை விவாதத்துக்கு விடாமல் தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ளது. இதைக் கண்டித்தும், சட்டத்திருத்தத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஏஐடியுசி மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம் தலைமை வகித்தாா். தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா் ஆா்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்து பேசினாா். இதில், மாவட்டச் செயலா் துரை. மதிவாணன், பொருளாளா் தி. கோவிந்தராஜன், விவசாய தொழிலாளா் சங்க முன்னாள் மாவட்டத் தலைவா் ஜி. கிருஷ்ணன், பட்டு கைத்தறி சங்க மாநில தலைவா் ஜி. மணிமூா்த்தி, மின் வாரிய சம்மேளன மாநிலத் துணைத் தலைவா் பொன். தங்கவேல், ஓய்வு பெற்றோா் சங்கப் பொதுச் செயலா் பி. அப்பாத்துரை, கும்பகோணம் அரசு போக்குவரத்து சங்கப் பொதுச் செயலா் எஸ். தாமரைச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.