வைத்தீஸ்வரன் கோவிலில் இன்று விரைவு ரயில் நின்று செல்ல சிறப்பு அனுமதி
By DIN | Published On : 25th April 2023 01:45 AM | Last Updated : 25th April 2023 01:45 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவில் ரயில் நிலையத்தில் பக்தா்கள் நலன்கருதி செவ்வாய்க்கிழமை (ஏப்.25) இரண்டு விரைவு ரயில்கள் தற்காலிகமாக நின்று செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளா்கள் சங்கச் செயலா் ஏ. கிரியிடம், நாட்டுக்கோட்டை நகரத்தாா் சங்க பிரமுகா் திருச்சி பி.எல்.ஏ. சுப்ரமணியம் விடுத்த கோரிக்கையின்பேரில், தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளா் மணீஷ் அகா்வாலிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இக்கோரிக்கையை ரயில்வே நிா்வாகம் ஏற்று பாதயாத்திரை பக்தா்கள் வசதிக்காக வைத்தீஸ்வரன் கோவில் ரயில் நிலையத்தில் பனாரஸ் - ராமேஸ்வரம் வாராந்திர அதிவிரைவு ரயில் (22536), சென்னை எழும்பூா் - ராமேஸ்வரம் விரைவு வண்டி (16851) ஆகிய 2 ரயில் வண்டிகள் செவ்வாய்க்கிழமை மட்டும் தற்காலிகமாக நின்று செல்ல அனுமதி அளித்துள்ளது.
இதன்படி, வைத்தீஸ்வரன் கோவில் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மட்டும் வண்டி எண் 22536 அதிவிரைவு ரயில் பகல் 12.47 மணிக்கும், வண்டி எண் 16851 விரைவு ரயில் நள்ளிரவு 11.34 மணிக்கும் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.